க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பாத்து முடிவு பண்ணுங்க... நம்ம ஊரு ரோட்ல ஓட்றதுக்கு இந்த கார்கள்தான் பெஸ்ட்...
எஸ்யூவி கார்களை போன்று க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் செடான் கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மோசமான சாலைகளில் கார்களை ஓட்ட வேண்டுமென்றால், சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) இருப்பது அவசியம். இதன் காரணமாக புதிய கார்களை வாங்குபவர்கள், மோசமான சாலைகளால் கார்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, க்ரவுண்ட் க்ளியரன்சுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்களும், தங்களது மாடல்களில் கணிசமான க்ரவுண்ட் க்ளியரன்ஸை வழங்கி வருகின்றன. பல சர்வதேச மாடல்கள், இந்திய சந்தையின் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில், அதிகமான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் உடன் மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் புதிதாக ஒரு காரை வாங்கும்போது விலை, மைலேஜ், டிசைன் ஆகிய அம்சங்களுக்கு வழங்கும் முன்னுரிமையை, க்ரவுண்ட் க்ளியரன்சுக்கும் கொடுப்பது அவசியமானது. எனவே எஸ்யூவி ரக கார்களை போன்று க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்ட செடான் ரக கார்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறோம்.

டாடா டிகோர் (Tata Tigor)
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மிமீ
டாடா நிறுவனத்தின் டியாகோ காரை போலவே, டாடா டிகோர் காரும் இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. இதற்கு அந்த கார், சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸை வழங்குவதும் ஒரு காரணமாக உள்ளது. டாடா டிகோர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ. டாடா டிகோர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது.

டாடா டிகோர் காரின் இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற கார்களில் ஒன்றாக டாடா டிகோர் திகழ்கிறது. எனவே நகர பயன்பாட்டிற்கு புதிய கார் வாங்குபவர்கள் மத்தியில், மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக டாடா டிகோர் உள்ளது.

மாருதி சியாஸ் (Maruti Ciaz)
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மிமீ
நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும், சரியான பட்ஜெட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்குவது மாருதியின் தனிச்சிறப்பு. அந்நிறுவனத்தின் சியாஸ் காரும் அப்படிப்பட்டதுதான். உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான வசதிகளுடனும் மாருதி சியாஸ் கார் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அத்துடன் மிகவும் சௌகரியமான கேபின் ஸ்பேஸ் மாருதி சியாஸ் காரில் உள்ளது. ஆனால் இத்தனை உள்ள போதும், சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருப்பதுதான் மாருதி சியாஸ் காரின் ஹைலைட். இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ. இதன் மூலம் போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை மாருதி சியாஸ் வழங்குகிறது.

ஃபோர்டு அஸ்பயர் (Ford Aspire)
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் - 174 மிமீ
ஃபோர்டு அஸ்பயர் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 174 மிமீ. இந்த செக்மெண்ட்டில் அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்ட கார்களில், ஃபோர்டு அஸ்பயரும் ஒன்று. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஃபோர்டு அஸ்பயர் கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura)
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் - 175 மிமீ
ஹூண்டாய் நிறுவனம் அவ்ரா காரை சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 175 மிமீ என்ற மிகச்சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸை ஹூண்டாய் அவ்ரா வழங்குகிறது. இதுதான் இந்த செக்மெண்ட்டிலேயே அதிகம். பெர்ஃபார்மென்ஸ் சார்ந்த 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் உள்பட மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் அவ்ரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








