மூன்று ஆடி சொகுசு கார்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்... முழு விபரம்
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மூன்று சொகுசு கார்களுக்கு மீண்டும் முன்பதிவை துவங்கி இருக்கிறது ஆடி கார் நிறுவனம். அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகள் முற்றிலும் முடங்கி இருக்கிறது. ஆடி கார் நிறுவனமும் இந்தியாவில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் வர்த்தக நடவடிக்களை துவங்குவதற்கான பணிகளில் ஆடி கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, தனது ஏ6, ஏ8 எல் மற்றும் க்யூ8 கார்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முன்பதிவை மீண்டும் துவங்குவதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்களை ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கார்களுமே ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இதில், ஆடி ஏ6 சொகுசு செடான் கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ரூ.54.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இந்த காரில் 245 பிஎச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பென்ஸ் இ க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஆடி கார் நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு செடான் கார் மாடலாக ஏ8 எல் கார் விற்பனையில் உள்ளது. இந்த காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய சொகுசு ரக செடான் மாடல். இந்த கார் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பென்ஸ் எஸ் க்ளாஸ் கார்களுக்கு போட்டியை அளித்து வருகிறது.

மூன்றாவது மாடலான க்யூ8 எஸ்யூவி கார் பிஎம்டபிள்யூ எக்ஸ்7, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் போன்ற உயர் வகை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது. இந்த காரில் அசத்தலான டிசைன் அம்சங்களுடன் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. ஆடி ஏ8 எல் காரில் பயன்படுத்தப்படும் அதே 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் உள்ளது.

ஆடி ஏ6, ஏ8 எல் மற்றும் க்யூ8 கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஊரடங்கு விலக்கப்பட்ட உடன் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மூன்று மாடல்களின் படங்கள், சிறப்பம்சங்களை இணையதளத்தில் பார்த்து புக்கிங் செய்வதற்கான வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








