ஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்
ஆடி க்யூ8 எஸ்யூவி கார் டெல்லியில் நடந்து வரும் நிகழ்ச்சியின் மூலமாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி கார் நிறுவனத்தின் க்யூ பிராண்டில் சொகுசு எஸ்யூவி கார் மாடல்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடி க்யூ வரிசையில் மிக அதிக விலை கொண்டதாக க்யூ-8 மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரின் விருப்பமாக இருந்து வரும் ஆடி க்யூ-7 சொகுசு கார் மாடலைவிட இந்த க்யூ-8 கார் அதிக விலை கொண்டது. ஆனால், க்யூ-7 சொகுசு எஸ்யூவி கார் 7 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், க்யூ-8 கார் 5 சீட்டர் மாடலாக வந்துள்ளது.

மேலும், இது முழுமையான எஸ்யூவி போல அல்லாமல், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே போன்ற எஸ்யூவி கூபே ரக மாடல்களுக்கு நிகரான வடிவமைப்பு ரகத்தில் க்ராஸ்ஓவர் டிசைனில் அசத்துகிறது.

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, பின்புறம் தாழ்வாக இருக்கும் கூரையுடன் கூபே போன்ற வடிவமைப்பு, 21 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள், இரண்டு டெயில் லைட்டுகளும் இணைந்தாற் போன்ற வடிவமைப்பு, ஸ்பிளிட்டர் மற்றும் இரட்டை சைலென்சர்கள் அமைப்புடன் கெத்தாக இருக்கிறது.

இந்த காரில் இரண்டு தொடுதிரைகளுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கட்டுப்பாட்டு சாதனமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாதனங்களை சப்போர்ட் செய்யும். 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இதர முக்கிய அம்சங்களாக உள்ளன.

இதுதவிர்த்து, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸட்டர், 8 ஏர்பேக்குகள், டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி, 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லேன் சேஞ்ச் வார்னிங் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. ஆடி க்யூ8 கார் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காருக்கு யூரோ என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

ஆடி க்யூ8 எஸ்யூவி காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அத்துடன் 48v மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக செலுத்தப்படுகிறது.

ஆடி க்யூ-8 கார் 58 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். 11 விதமான இன்டீரியர் தீம்களையும், 9 விதமான மர அலங்கார வேலைப்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

ரூ.1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் ஆடி க்யூ-8 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பென்ஸ் ஜிஎல்இ கூபே கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








