வேகத்தை காட்டிலும் வேகம்... செயல்திறன்மிக்க புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 மாடலின் டீசர் வீடியோ வெளியீடு...
ஆடி நிறுவனம் விரைவில் புதிய ஆர்எஸ் க்யூ8 மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இந்நிறுவனத்தில் இருந்து இந்த காரின் புதிய டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஆடியின் இந்த புதிய ஆர்எஸ் க்யூ8 மாடல் ஆனது வழக்கமான க்யூ8 எஸ்யூவி மாடலின் செயல்திறன்மிக்க வெர்சன் ஆகும். முன்னதாக ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரின் அறிமுகத்தின்போது, இந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் (ஆர்எஸ்7) மட்டுமே இந்த வருடத்தில் இந்தியாவிற்கு வரும் ஆர்எஸ் மாடலாக இருக்காது என ஆடி இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி பல்பிர் சிங் திலோன் மறைமுகமாக ஆர்எஸ் க்யூ8 மாடலின் வருகையை உறுதிப்படுத்தி இருந்தார்.

2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8 கார் இந்நிறுவனத்தின் அதிவேகமான எஸ்யூவி காராகும். நர்க்பர்க்ரிங் களத்தில் இந்த கார் லேப் நேரத்தை 7 நிமிடம் 42.2 வினாடிகளாக பெற்றிருந்தது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஆர்எஸ் எஸ்யூவி மாடலில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

இந்த என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இதனுடன் நிறுவனத்தின் தனித்துவமான குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆர்எஸ் க்யூ8 கார் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும். செயல்திறன் மட்டுமில்லாமல் வழக்கமான க்யூ8 மாடலில் இருந்து வெளிப்புற தோற்றத்திலும் இந்த ஆர்எஸ் மாடல் வேறுப்படுகிறது.

ஏனெனில் இந்த காரில் முரட்டுத்தனமான முன்பகுதியுடன் புதிய சிங்கிள்-ஃப்ரேம் க்ரில், ரீடிசைனில் முன் மற்றும் பின்புற பம்பர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட டிஃப்யூஸர் மற்றும் ஆர்எஸ் மாடல்களுக்கே உண்டான ஸ்பாய்லர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆர்எஸ் மாடலுக்கு 22 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் நிலையாக பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு மாற்றாக 23 இன்ச்சிலும் அலாய் சக்கரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்படுகிறது. காரின் உட்புறத்தில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், லெதர் & அல்காண்ட்ரா ட்ரிம்கள், ஆர்எஸ் மாடல்களின் தனித்துவமான தாழ்வான-தட்டையான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் விர்டியுவல் காக்பிட் உள்ளிட்டவை நிரப்பப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








