இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் கார், பைக் நிறுவனங்கள் விபரம் உள்ளே!
வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ திருவிழா நாளை கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட்டில் துவங்க இருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் நாட்டின் பல முன்னணி கார், பைக் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி 17 புதிய மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில், ஃப்யூச்சரோ இ என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் எல்லோரின் ஆவலையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதேபோன்று, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ், இக்னிஸ் கார்களின் பிஎஸ்-6 மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் 14 புதிய கார் மாடல்களுடன் தனது அரங்கத்திற்கு பார்வையாளர்களை சுண்டி இழுக்க திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை க்ரெட்டா, வெர்னா கார்கள் மற்றும் டூஸான் பிஎஸ்-6 மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ரெனோ ஆகிய நிறுவனங்களும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாடல்களுடன் கலக்க காத்திருக்கின்றன.

இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் கிரேட் வால் மோட்டார்ஸ் மற்றும் எஃப்டபிள்யூஏ ஆகிய சீன கார் நிறுவனங்களும் களமிறங்க இருப்பதால், இந்திய கார் சந்தையில் சந்தைப் போட்டி அதிகரிக்கும் என்று நம்பலாம்.

மறுபுறத்தில் ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டட்சன், ஹோண்டா, டொயோட்டா, ஆடி, ஃபியட் க்றைஸ்லர், பீஜோ, ஜாகுவார், லேண்ட்ரோவர், வால்வோ, நிஸான், லெக்சஸ் ஆகிய நிறுவனங்கள் தவிர்க்க உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார்ஸ், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. யமஹா, ஜாவா, கவாஸாகி, ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், பியோஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா, ஏப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








