பெட்ரோல், டீசல் போட்டு காசை கரி ஆக்காதீங்க... மைலேஜை வாரி வழங்கும் இந்த கார்கள் பற்றி தெரிஞ்சுகோங்க
இந்தியாவில் எரிபொருள் சிக்கனத்தில் தலை சிறந்து விளங்கும் கார்களின் பட்டியலை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

புதிய கார்களை வாங்கும்போது, விலை, பாதுகாப்பு வசதிகள், டிசைன் என பல்வேறு அம்சங்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட அதிக முன்னுரிமை கொடுப்பது என்னவோ மைலேஜிற்குதான். மைலேஜை வாரி வழங்கும் கார்களைதான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிறந்த மைலேஜ் கார்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். நீங்கள் கார் வாங்குவதாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும்.

ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)
பெட்ரோல் - ஒரு லிட்டருக்கு 18.2 கிமீ, டீசல் - ஒரு லிட்டருக்கு 27.3 கிமீ
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் கார்களில் ஹோண்டா ஜாஸ் மாடலும் ஒன்று. ஹோண்டா ஜாஸ் கார், பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாடல் ஆகும். எரிபொருள் சிக்கனத்தில் ஹோண்டா ஜாஸ் தலைசிறந்து விளங்குகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஜாஸ் கார், 7.45 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது.

இது 5 சீட்டர் கார் ஆகும். ஹோண்டா ஜாஸ் காரின் 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 18.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. அதேசமயத்தில் ஹோண்டா ஜாஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.3 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்க கூடியது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS)
பெட்ரோல் - ஒரு லிட்டருக்கு 20.7 கிமீ, டீசல் - ஒரு லிட்டருக்கு 26.2 கிமீ
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில், எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்கும் மற்றொரு கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ். 5.05 லட்ச ரூபாய் என்ற விலையில் இருந்து இந்த கார் கிடைக்கிறது. மொத்தம் 15 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 11 வேரியண்ட்கள் மேனுவல் மாடல் ஆகும். அதே சமயம் 4 வேரியண்ட்கள் ஏஎம்டி ஆகும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.7 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. அதே சமயம் இந்த காரின், 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 26.2 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்க கூடியது. இது அராய் நிறுவனத்தால் சான்று அளிக்கப்பட்ட மைலேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிட்டி (Honda City)
பெட்ரோல் - ஒரு லிட்டருக்கு 17.4 கிமீ, டீசல் - ஒரு லிட்டருக்கு 25.6 கிமீ
ஹோண்டா சிட்டி காரின் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.4 கிலோ மீட்டர்கள் மைலேஜையும், 1.5 லிட்டர் ஐ-டிடெக் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 25.6 கிலோ மீட்டர்கள் மைலேஜையும், வாரி வழங்க கூடியது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, 2020 ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் இருக்கும் அதே இன்ஜின் லைன்அப்தான், மேனுவல் மற்றும் சிவிடி ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்ஜின் லைன்அப் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும்.

ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V)
பெட்ரோல் - ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ, டீசல் - ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ
ஹோண்டா டபிள்யூஆர்-வி காரின் மைலேஜ், கிட்டத்தட்ட ஹோண்டா சிட்டி காரை போலவே உள்ளது. இந்த காரின் விலை 8.15 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஹோண்டா டபிள்யூஆர்-வி காரின், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.5 கிலோ மீட்டர் மைலேஜையும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 25.5 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்க கூடியது.

பிஎஸ்6 இன்ஜின்கள் மற்றும் காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் 2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது இந்த புதிய மாடலுக்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீங்கள் இந்த காரை வாங்க விரும்பினால், 21 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இங்கே வழங்கப்பட்டிருக்கும் கார்களின் மைலேஜ்கள் அராய் அமைப்பால் சான்று அளிக்கப்பட்டவை ஆகும். எனவே நீங்கள் காரை ஓட்டும்போது மைலேஜ் மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications








