பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு செடான் கார் மாடலாக 3 சீரிஸ் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த சொகுசு செடான் காரில் வழங்கப்பட்டு வந்த ஸ்போர்ட் டீசல் வேரியண்ட் நீக்கப்பட்டு இப்போது பெட்ரோல் மாடலில் ஸ்போர்ட் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட் வேரியண்ட்தான் 3 சீரிஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கும்.

இந்த புதிய 330ஐ ஸ்போர்ட் பெட்ரோல் வேரியணட்டிற்கு ரூ.41.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்ப்டடு இருக்கிறது. சந்தைப் போட்டியை மனதில் வைத்து 3 சீரிஸ் சொகுசு காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் ட்வின் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், லான்ச் கன்ட்ரோல், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பேடில் ஷிஃப்ட் வசதி, 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், 330ஐ எம் ஸ்போர்ட் மற்றும் 320டீ லக்சுரி லைன் மாடலில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மேலும், பிஎம்டபிள்யூ ஐ-ட்ரைவ் செயலியும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக கூறலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 17 அங்குல அலாய் வீல்கள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பார்க்கிங் கேமரா, ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளன.

ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார். இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் வால்வோ எஸ்60 ஆகிய கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








