போச்சு... ஏற்கனவே பிஎம்டபிள்யூ காரை அவ்ளோ ஈஸியா வாங்க முடியாது... இதுல இது வேறயா?
பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா வாகனங்களின் விலை வரும் ஜனவரி 4ம் தேதி முதல் உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனைத்து பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விலைகளை திருத்தியமைக்க உள்ளதாக பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் இதனை இன்று (டிசம்பர் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருவதால், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தியாக வேண்டியது அவசியம் எனவும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவாஹ் கூறுகையில், 2021ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் இருந்து பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களுக்கான புதிய விலைகளை பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா அறிமுகம் செய்யும். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதை ஓரளவிற்கு ஈடுகட்டும் விதமாக கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரவுள்ளது'' என்றார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில், 8 சீரிஸ் க்ரான் கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்6, பிஎம்டபிள்யூ இஸட்4, பிஎம்டபிள்யூ எம்8 கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. அதேபோல் மினி பிராண்டிலும் பல்வேறு கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், மினி 3-டோர், மினி 5-டோர், மினி கன்வெர்டபிள், மினி க்ளப்மேன் உள்ளிட்ட கார்கள் முக்கியமானவை. பிஎம்டபிள்யூ நிறுவனத்தை தொடர்ந்து மற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களும் வாகனங்களின் எக்ஸ் ஷோரூம் விலைகளை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது வாகனங்களின் விலைகளை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர ஃபோர்டு, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








