சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலை மீண்டும் திறப்பு... உற்பத்திப் பணிகள் துவங்கியது!
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த, சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுடன் டீலர்களும் விரைவில் திறக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை மாதங்களாக நீடித்து வரும் இந்த ஊரடங்கு வரும் 17ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கார் ஆலைகள் மற்றும் டீலர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பும், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பும் ஏற்படுவதை மனதில் வைத்து, உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அரசு ஊரடங்கு விதிகளில் தளர்வு வழங்கி வருகிறது.

இதனையடுத்து, வாகன உற்ப்ததி நிறுவனங்களும், டீலர்களும் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அரசு சிறப்பு அனுமதி பெற்று உற்பத்திப் பணிகள் கடந்த சில தினங்களாக துவங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனத்தின் சென்னை ஆலையில் இன்று முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை ஆலையில் 50 சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரே ஷிஃப்ட் முறையில் கார் உற்பத்திப் பணிகள் நடைபெறும்..

கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி உற்பத்திப் பணிகள் நடக்கும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேலும், ஆலைக்கு வரும் பணியாளர்களின் உடல் பரிசோதனை செய்வது, முக கவசங்கள் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு முறைகளும் பின்பற்றப்படும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், குர்கானில் உள்ள தலைமையகத்தில் பணிபுரியும் பிஎம்டபிள்யூ இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் நிறஉவனம் மற்றும் விற்பனைப் பிரிவு பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ, மினி கார் ஷோரூம்களும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஷோரூம்களும் விரைவில் திறக்கப்பட்டு, விற்பனைப் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, விற்பனைப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








