பவர்ஃபுல் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 எம் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்முறையாக எக்ஸ்3 எஸ்யூவியின் எம் பெர்ஃபார்மென்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் சொகுசு எஸ்யூவியின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் சிறந்த மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 வாடிக்கையாளர்களிடம் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் மத்தியிலும் இந்த மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எக்ஸ்3 எம் என்ற பெர்ஃபார்மென்ஸ் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் சொகுசு எஸ்யூவியில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் ட்வின்டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 486 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் பயன்படுத்தப்படும் 6 சிலிண்டர் எஞ்சின் தேர்வுகளில் அதிசக்திவாய்ந்ததாகவும் இது வந்துள்ளது.

இந்த புதிய எஞ்சினுடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எஞ்சின் சக்தி இந்த டிரான்ஸ்மிஷன் அமைப்பு மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

சாதாரண பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவியைவிட இந்த காரில் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. விசேஷமான சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையுடன் சிறப்பான கையாளுமை, புதிய சேஸீயுடன் கலக்கலாக வந்துள்ளது.

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில் தோற்றத்தில் மிரட்டலாக மாற்றங்களுடன் இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ண கிட்னி க்ரில் அமைப்பு, வலிமையான தோற்றத்தை தரும் பம்பர் மற்றும் பானட், 20 அங்குல எம் லைட் அலாய் வீல்கள், அதிக ஏரோடைனமிக்ஸ் வழங்கும் விசேஷ வடிவமைப்புடைய சைடு மிரர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காரில் உட்புறம் அதிக சொகுசு அம்சங்களை பெற்றிருக்கிறது. வெர்னாஸ்கா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எம்- கார்களுக்கான விசேஷ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், வெர்ச்சுவல் அசிஸ்ட் வசதிகள் இந்த காரின் மதிப்பை கூட்டும் அம்சங்களாக உள்ளன.

முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. செயல்திறன் மிக்க இந்த சொகுசு மிட்சைஸ் எஸ்யூவி மாடலுக்கு ரூ.99.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








