இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு விரைவில் பெரு மகிழ்ச்சியான செய்தி!
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேல் அல்லாடி வரும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு விரைவில் மிகவும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க இருக்கிறது.

உலகின் மிக வேகமாக வளரும் ஆட்டோமொபைல் சந்தை என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆனால், கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் துறை மந்தமான நிலையில் உள்ளது. போதாக்குறைக்கு இப்போது கொரோனா வேறு ஆட்டோமெபைல் துறைக்கு பெரும் இழப்பை கொடுத்துள்ளது.

இந்த பெரும் இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு அரசு தக்க உதவிகளையும், கொள்கை முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என்று இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், மத்திய அரசின் ஓரு அறிவிப்பு, ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், அதிக மாசு உமிழ்வை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அழிப்பதற்கான திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, 15 ஆண்டுகளுக்கு மேல் அதிக மாசு உமிழ்வை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை முழுவதுமாக அழிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

இந்த புதிய சட்டத்திற்கு மிக விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பழைய வாகனங்களை அழிப்பதற்கான புதிய சட்டம் குறித்து தீவிர ஆலோசனகளை நடத்தி வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்படும்," மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்டத்தை மிக விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக சியாம் நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியபோது தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, பல்வேறு நன்மைகள் ஏற்படும். முதலில் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், பழைய வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து விடைபெறும்.

கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார், பைக், ஆட்டோரிக்ஷா உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். எனவே, இந்த திட்டம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்து, இந்த பழைய வாகனங்களை உடைக்கும்போது கிடைக்கும் ஸ்டீல் உள்ளிட்ட பாகங்களை மறுசுழற்சி செய்து கார் உள்ளிட்ட வாகனத் தயாரிப்புக்கான மீண்டும் பயன்படுத்த முடியும். இதனால், வாகன உற்பத்திக்கான செலவு 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் வாகன உற்பத்தி புதிய அத்யாயத்திற்கு செல்லும் என்று தெரிகிறது.

மேலும், பழைய வாகனங்களை அழிப்பதற்கான வழங்குபவர்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு சில ஊக்குவிப்புத் திட்டங்களும் வழங்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால், புதிய வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கும்.

இதுதவிர்த்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால், வர்த்தக வாகன விற்பனையும் அதிகரிக்கும். இந்த திட்டம் வாகன உற்பத்தியாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








