புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வருகை மற்றும் விலை குறித்த தகவல்கள்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி எந்த வகையில் நிலைநிறுத்தப்படும்; அதன் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்படும் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எஸ்யூவி மாடல்களில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியும் ஒன்று. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிஎஸ்ஏ குழுமம்தான் தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டுடன் இந்தியாவில் களமிறங்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

தற்போது கொரோனா பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக வர இருக்கும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் அறிமுகத்தை ஒத்திப்போடுவதற்கு பிஎஸ்ஏ குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோக் உள்ளிட்ட மாடல்களுக்கு இணையாக களமிறக்கப்பட உள்ளது. அதாவது, மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் வகை மாடலாக நிலைநிறுத்தப்படும்.

இதனால், இந்த புதிய மாடலானது ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக முதல்கட்டமாக 15 ஷோரூம்களை இந்தியாவில் திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டு வரும் முதல் சிட்ரோன் ஷோரூம் குறித்த தகவல்களும் வெளியாகின.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் அல்லது 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 131 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 180 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








