மோசே சோதனையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார்... இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்...?
இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல் மோசே சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இந்திய சந்தையில் விரைவில் நுழையவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வகையில் இதன் முதல் இந்திய அறிமுக மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த வருடத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்குள்ளாக கொரோனாவின் தாக்கம் தீவிரமடையவே சிட்ரோன் ப்ராண்ட்டின் வருகை அடுத்த வருடத்திற்கு தள்ளிபோகியுள்ளது. இதற்கிடையிலான இந்த சோதனை, உடனடி வளைவுகளில் காரின் பண்பை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிமீ77.காம் என்ற யுடியுப் சேனலால் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஒட்டுனர் காரை உடனடி திருப்பத்திற்கு உட்படுத்த இடையிடையே தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சோதனை வெவ்வேறு விதமான வேகங்களில் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது முதல் சுற்றில் காரின் வேகம் 73 kmph என்ற அளவில் தான் உள்ளது. ஓட்டுனர் கார்களை இயக்குவதில் திறமை உடையவராக இருப்பதால் இந்த சுற்றை எளிதாக கடந்துவிட்டார். பின்னர் காரை 79 kmph வேகத்தில் இயக்கியவர், எந்தவொரு கட்டுப்பாட்டு இழப்புமின்றி காரை வேண்டுமென்றே அதிக திசை திருப்பல்களுடன் இயக்குகிறார்.

பிறகு இதே சோதனை 81 மற்றும் 84 kmph என்ற வேகங்களில் நடத்தப்படுவதுபோல் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதில் அனைத்து சுற்றுகளில் காரின் கட்டுப்பாடு நிலையானதாகவே உள்ளது. அதி வேகத்தின்போது எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோல் (இஎஸ்சி) செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இது அதி வேகத்திலும் காரின் இயக்க வடிவத்தை நேர்த்தியாக கொண்டுவந்துள்ளது. சாஃப்ட் சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ள போதிலும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் செயல்பாடு எவ்வாறு அருமையாக உள்ளது என்பதை இந்த சோதனை வீடியோ வெளிக்காட்டுகின்றது.

இந்திய சந்தையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வழங்கப்படவுள்ளது. ஃபியாட் மல்டிஜெட் யூனிட் உடன் சோதனை செய்யப்பட்டுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.

என்ஜின் அமைப்பில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. ஜீப் காம்பஸ், டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கவுள்ள இந்த எஸ்யூவி காரில் முன் சக்கர ட்ரைவ் தளவமைப்பு நிலையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








