சிட்ரோனின் இந்திய சந்தைக்கான 4 தயாரிப்பு கார்கள்... அடுத்த ஆண்டில் இருந்து வெளிவரவுள்ளன...
சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருடன் கூடுதலாக மூன்று மாடல்கள் என மொத்தமாக 4 தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரெஞ்சு ஆட்டோமொபைல் க்ரூப்பான பிஎஸ்ஏ, சிட்ரோன் ப்ராண்டின் மூலமாக மீண்டும் இந்திய சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. இதன்படி சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டின் முதல் கால்பகுதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

இந்த நிலையில் தான் சிட்ரோன் ப்ராண்டில் மேலும் மூன்று மாடல்கள் இந்திய சந்தைக்காக வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் மாடலாக ஏற்கனவே நமக்கு தெரிந்த சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் சிகேடி முறையில் நம் நாட்டில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

ஆனால் இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் இருந்து அடுத்தடுத்ததாக அறிமுகமாகவுள்ள மற்ற மூன்று கார்களும் சிட்ரோனின் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.

இந்த கூடுதலான மூன்று மாடல்களில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி, ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் சி-பிரிவு செடான் உள்ளிட்டவை அடங்கும். இதில் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல் தான் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் சி21 என்ற குறியீட்டு பெயருடன் சிட்ரோன் ப்ராண்ட்டில் இருந்து வெளிவரும் இரண்டாவது தயாரிப்பாக விளங்கவுள்ளது.

2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி கார், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக விளங்கவுள்ளது.

மற்றபடி எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்த எந்த திட்டமும் சிட்ரோன் நிறுவனத்திடம் தற்போதைக்கு இல்லை. ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள வாகனங்கள் எலக்ட்ரிக் வெர்சனை பெறலாம் என சிட்ரோன் நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ லிண்டா ஜாக்சன் ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும், தயாரிப்புகள் அனைத்தும் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் தான் இந்திய சந்தைக்காக தயாரிக்கப்படவுள்ளன. 90 சதவீதம் இந்தியாவிலேயே உருவாக்கப்படவுள்ள இந்த தயாரிப்புகளை பிஎஸ்ஏ க்ரூப்பை சேர்ந்த வேறெந்த நிறுவனமும் விற்பனை செய்யாது எனவும் ஜாக்சன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








