கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்... புதிய கார், பைக் வாங்க படையெடுக்கும் மக்கள்... ஏன் தெரியுமா?
புதிய கார், பைக் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், வாகன நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதையே பாதுகாப்பானதாக கருகின்றனர்.

இதன் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. மக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்யவே விரும்புகின்றனர் என, கடந்த சில வாரங்களாக வெளியாகி வரும் ஆய்வு முடிவுகளும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. இது உண்மை என்பதை விசாகப்பட்டிணம் மக்கள் நிரூபித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் முன்பதிவு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் ரோமித் மஹாஜன் என்பவர் சொல்லும் காரணத்தை நாம் கேட்கலாம். இவர் விசாகப்பட்டிணத்தில் பிபிஓ ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கேப்களை புக் செய்ய முயன்று முயன்று சோர்ந்து போய், தற்போது தனக்கான சொந்த வாகனத்தை வாங்கி விடுவது என ரோமித் மஹாஜன் முடிவு செய்துள்ளார். முதலில் தனது அலுவலகத்திற்கு செல்வதற்கு பொது போக்குவரத்து சேவைகளைதான் ரோமித் மஹாஜன் பயன்படுத்தி வந்தார். ஆனால் தற்போது சொந்த வாகனம்தான் நல்ல தீர்வாக இருக்கும் என அவர் யோசிக்க தொடங்கியுள்ளார்.

ஊரடங்கு, மிகவும் கடுமையான சமூக விலகல் விதிமுறைகள் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன. இது குறித்து ரோமித் மஹாஜன் கூறுகையில், ''முதலில் கேப் புக் செய்து பயணம் செய்வேன். ஆனால் தற்போது அத்தகைய சேவைகள் போதுமான அளவில் இல்லை. எனவே எனக்கான சொந்த வாகனத்தை வாங்குவதுதான் சிறந்தது என நினைக்கிறேன்'' என்றார்.

சொந்த வாகனம் வாங்குவதுதான் நல்லது என இவர் மட்டும் நினைக்கவில்லை. விசாகப்பட்டிணத்தில் பலர் இதைதான் நினைத்து கொண்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக வாகனங்களின் விற்பனை மற்றும் புக்கிங் அதிகரித்து கொண்டே வருவதே இதற்கு சாட்சி. இதுகுறித்து லட்சுமி ஹூண்டாய் நிறுவனத்தின் பொது மேலாளர் விஸ்வேஸ்வர ராவ் கூறுகையில், ''ஜூன் 1ம் தேதி எங்கள் ஷோரூம் திறக்கப்பட்டது.

தற்போது முன்பதிவு மற்றும் வாகனங்களை வாங்குவது தொடர்பான விசாரணைகள் மிகவும் அதிக அளவில் வருகின்றன. இது முந்தைய ஆண்டுகளின் எந்தவொரு ஜூன் மாதத்தை காட்டிலும் அதிகமாகும். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு இருக்கும் அச்சத்தை நிச்சயமாக இதற்கு ஒரு காரணியாக கூறலாம்'' என்றார்.

இதுகுறித்து மற்றொரு கார் ஷோரூம் ஊழியர் ஒருவர் கூறுகையில், ''ஏர்-கண்டிஷனர் இல்லாத ஒரு சில விலை குறைவான மாடல்களையும் நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். ஆனால் அந்த தயாரிப்புகள் மீதும் கூட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மக்கள் காரை அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கின்றனர். லக்ஸரியாக பார்க்கவில்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது'' என்றார்.

பலர் தங்கள் முதல் காரை வாங்க முயற்சி செய்து வருகின்றனர். அதே சமயம் டூவீலர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக இரண்டாவது அல்லது மூன்றாவது டூவீலரை தற்போது வாங்கி வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீனிவாஸா யமஹாவின் மேனேஜிங் பார்ட்னர் தசரத ராம்ரெட்டி கூறுகையில், ''புக்கிங், விசாரணைகள் அதிகரித்துள்ளது.

இவ்வளவு லாபகரமான ஒரு ஜூன் மாதத்தை நாங்கள் பார்த்ததில்லை'' என்றார். வரும் மாதங்களில் வாகன விற்பனை இன்னும் நன்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் நிலவும் தேவைக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு வாகன நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








