வீடாக மாறிய நானோ கார்... ஒன்றல்ல, இரண்டல்ல 47 நாட்களாக வசித்து வரும் இளைஞர்... ஏன் தெரியுமா?
கொரோனா வைரஸ் காரணத்தால் இளைஞர் ஒருவர் டாடா நானோ காரை வீடாக மாற்றியிருக்கின்றார். இது குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கின்றது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிக கடுமையாக விளையாடிக் கொண்டிருக்கின்றது இந்த வைரஸ். இதனால், இவர்களில் பலர் வாழ்வாதரத்தை இழந்து மிகப் பெரிய அவலை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலை ஏழை மற்றும் எளிய மக்களுக்கு மட்டுமின்றி சில நடுத்தர மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதை உறுதிச் செய்கின்ற வகையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக 47 நாட்களாக நானோ காரையே வீடாக மாற்றி வசித்து வருகின்றார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தேசியளவில் இந்த தடையுத்தரவை மத்திய அரசு வெளியிட்டதை அடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களும் தங்களது வாசல் கதவுகளை அடைத்துக் கொண்டன.

இதில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து பணி செய்து வந்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் அகதிகளாக மாறினர்.

அப்படியாக சொந்த நாட்டிலேயே அகதியாக மாறியவர்தான் மபி மாநிலத்தைச் சேர்ந்த பராஸ் திவிவேடி. இவர் அகதியாக மாறியதற்கு முற்றிலும் வித்தியாசமான காரணம் உண்டு.
பராஸ் திவிவேடி, மத்திய பிரதேச மாநிலத்தன் சாகர் என்னும் பகுதியில் வசித்து வருகின்றார். இவர், கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி டாடா நானோ காரில் உறவினரை சந்திப்பதற்காக அசாம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

லாக்டவுணால் பாதிக்கப்பட்ட இளைஞர், அவரின் காருடன் நிற்கும் படம்...
இந்த பயணத்தின் இரண்டாம் நாளான மார்ச் 24ம் தேதி அன்று கார் நடு சாலையில் திடீரென நின்றுள்ளது. அதனை மீண்டும் ஸ்டார்ட் செய்யும் விதமாக பராஸ் பல முறை முயற்சித்துள்ளார். ஆனால், அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் மெக்கானிக்குகள் யாரேனும் இருக்கிறார்களா என அவர் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், அவரின் துரதிர்ஷ்டம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஒரு மெக்கானிக்கும்கூட அவரின் கண்களில் தென்படவில்லை. இருப்பினும், அருகில் இருந்த ஒரு சிலர் அவருக்கு உதவும் விதமாக மெக்கானிக்கின் தொடர்பை வழங்கியிருக்கின்றனர்.

அவர்களைத் தொடர்பு கொண்டு வரவழைத்த பராஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், கார் பழுதை நீக்க மிகப் பெரிய தொகையை மெக்கானிக் கோரியுள்ளார். ஆனால், அவரிடத்தில் போதிய தொகை அப்போது கைவசம் இல்லை என கூறப்படுகின்றது. எனவே, விரைவில் ஊரடங்கு உத்தரவு முடிந்துவிடும் என காத்திருக்க தொடங்கினார் பராஸ்.

ஆனால், 47 நாட்களாகியும் தற்போது தடையுத்தரவு நீடித்த வண்ணமே இருக்கின்றது. இருப்பினும், காரை விட்டு செல்ல மனமில்லாத பராஸ், டாடா நானோ காரை படுக்கும் அறையாக மாற்றி தங்கினார். உணவு உட்கொள்ளவதற்கு காரின் இருக்கைகளையே டேபிள்களாக மாற்றி அவர் பயன்படுத்தியுள்ளார்.

ஜார்காண்ட் மாநிலத்தின் சவுபரான் பகுதியில் உள்ள ஜிடி சாலையில்தான் கார் திடீரென பழுதாகி நின்றது. தற்போது வரையிலும் கார் அதே பகுதியில்தான் நின்றுக் கொண்டிருக்கின்றது.
இது நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் அவருக்கு தேவையான உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தினம்தோறும் மேகி அல்லது பழங்களை மட்டுமே உணவாக எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. சில நேரங்களில் இந்த உணவுகூட கிடைக்காத நிலை உருவாகியதாக பராஸ் தெரிவிக்கின்றார். ஆகையால், சரியாக உணவு எடுத்துக்கொள்ளாத காரணத்தால் அவர் முன்பைக் காட்டிலும் தற்போது உடல் தேகம் மெலிந்து காணப்படுகின்றார்.

காரை சரி செய்ய மெக்கானிக் ரூ. 10,000 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த அதிகபட்ச தொகை இல்லாத காரணத்தினாலயே பராஸ் சொந்த நாட்டில் அகதியாக மாறியிருக்கின்றார். பலர் வெவ்வேறு காரணங்களுக்காக அகதிகளாக மாறியிருக்க, பராஸின் இந்த நிலை நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பராஸ் வீடாக மாற்றியிருக்கும் டாடா நானோ காரானது, ஏழைகளின் கார் இந்தியாவில் வர்ணிக்கப்பட்டு வருகின்றது. புதிய விதிகளின் காரணமாக இந்த கார் தற்போது உற்பத்தியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. இது விற்பனைக்கு வந்த புதிதில் ரூ. 1 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவேதான் இதனை ஏழைகளின் கார் என மக்கள் புகழாரம் சூட்டினர்.


Click it and Unblock the Notifications








