இவர் போல் ஒருவரை காண்பது அரிது! இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...
தமிழ், இந்தி என இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் திரைப்பிரபலம் தற்போதும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் மற்றும் மாருதி ஜென் ஆகிய வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்படும் பலர் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். அம்மாதிரியானவர்களில் ஒருவரே இந்த சோனு சூத். தமிழ் மற்றும் இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வரும் இவர், பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகின்றார்.

சில நேரங்களில் பாசம் நிறைந்த சகோதரர் ரோலிலும் அவர் நடிப்பது உண்டு. ஆனால், இதைக்காட்டிலும் பல மடங்கு அவருக்கு ஏற்ற ரோலாக வில்லன் கதாபாத்திரமே இருக்கின்றது. எனவே, பலரின் கண்களுக்கு இவர் வில்லன் என்ற பிம்பமே ஒளித்து வருகின்றது.
இந்நிலையில், சோனு சூத் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக தனது செலவிலேயே பேருந்து ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் அவர் இந்தியா முழுவதும் மாஸ் ஹீரோ போல் பேமஸாகிவிட்டார்.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட்டிருந்த நிலையில், சோனு சூத் மேற்கொண்ட முயற்சியால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது தங்களின் சொந்த மாநிலத்தைச் சென்று சேர்ந்துள்ளனர். இதற்காக பல லட்சங்களை அவர் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்த செலவைக் காட்டிலும் அவருக்கு சேர்ந்திருக்கும் புகழ் விலை மதிப்பற்றது. இதனால் நிஜ வாழ்க்கை ஹீரோவாக சோனு சூத் மாறியிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் சோனு சூத் பற்றிய தகவலை இணையத்தில் தேட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு தேடியதில் அவரைப் பற்றிய பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

ஆம், மற்ற திரைப்பட நடிகர்களைப் போலவே சோனு சூத்-ம் சொகுசு வாகன விரும்பியாக இருக்கின்றார். இதன்காரணமாக ஏகப்பட்ட விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் அவரின் வீட்டு கராஜில் அணி வகுத்து நிற்கின்றன. அதேசமயம், அவர் பழைய தலைமுறை மாருதி சுசுகி ஜென் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய வாகனங்களை தற்போதும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களை பற்றிய சிறப்பு தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

போர்ஷே பனமேரா
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த போர்ஷ் நிறுவனம் விற்பனைச் செய்யும் உலகப் புகழ்வாய்ந்த மாடல்களில் பனமேரா மாடலும் ஒன்று. இது நான்கு கதவுகளைக் கொண்ட கூபே ரக காராகும். இக்காரை இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சோனுவும் இந்த காரை கடந்த ஒரு சில ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றார்.

இந்த காரின் புதிய தலைமுறை கார் தற்போது இந்தியாவில் ரூ. 1.49 கோடி முதல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது ஆரம்பநிலை மாடலின் விலையாகும். சோனுவின் போர்ஷே பனமேரா ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட கார் என்பதால் அதன் விலை பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

அக்காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 250 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. விருது விழா மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்போது மட்டுமே இக்காரை அவர் பயன்படுத்துகின்றார்.

ஆடி க்யூ7
சோனு நீண்ட நாட்களாக பயன்படுத்தும் கார்களில் ஆடி நிறுவனத்தின் க்யூ7 இருக்கின்றது. அந்தவகையில், முன்னதாக பயன்படுத்திய ஆடி க்யூ7 காரொன்று விபத்தின் காரணமாக தீப்பிடித்து கருகியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் புதிய ஆடி க்யூ 7-ஐ அவர் வாங்கினார். தற்போது அக்காரில்தான் அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக திரைப்பட விழாக்களில் கலந்துக் கொள்ளச் செல்லும்போது க்யூ7 காரிலேயே அவர் செல்கின்றார்.

அவ்வாறு அவர் செல்லும்போது பல நேரங்களில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த காரை விட்டு வெளியே வந்து கோஷம் எழுப்பிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
ஆடி க்யூ7 கார் இந்தியாவில் ரூ. 69.22 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகின்றது. இதன் உயர்நிலை மாடலின் விலை கோடியைத் தொடுகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ்
சோனு சூத் பயன்படுத்தும் மிட் சைஸ் கார்களில் அதிக விலையுயர்ந்த மற்றும் சொகுசு காராக மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்-கிளாஸ் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருந்து நீக்கப்படமால் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் பெயர் மட்டும் ஜிஎல்இ மாற்றப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

சோனுவின் பொதுவான பயண வாகனமாக இது இருந்து வருகின்றது. எனவே, அரிதினும் அரிதாகவே இக்காரில் அவர் பயணிக்கின்ரார். இது சற்றே பழைய மாடலாக தோற்றமளித்தாலும், அதன் மினு மினுக்கும் தோற்றம் குறையாமல் காட்சியளிக்கின்றது. இந்த காரின் புதிய மாடல் தற்போது இந்தியாவில் 73 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பஜாஜ் சேத்தக்
இந்த பழமை வாய்ந்த ஸ்கூட்டரை சோனு, அவரின் தந்தையின் நினைவாக பயன்படுத்தி வருகின்றார். சோனுவும் அவரின் தந்தையும் இந்த இருசக்கர வாகனத்தில்தான் சிறிய வயதில் பயணித்துள்ளனர். இதனாலயே அந்த ஸ்கூட்டரை கைவிட மனமில்லாமல் பயன்படுத்தி வருகின்றார். மேலும், அதனை நல்ல முறையில் பராமரித்து வருகின்றார்.

ஸ்கூட்டரில் பயணிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சத்தம் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனாலயே வீட்டில் இருக்கும்போது பொழுதுபோகவில்லை என்றால் அதில் ஜாலி ரைடு வருகின்றார். இதுகுறித்த டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

மாருதி சுசுகி ஜென்
பெரும்பலானோரின் முதல் வாகனமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றது. அந்தவகையில், சோனுவின் முதல் காராக மாருதி நிறுவனத்தின் ஜென் கார் இருக்கின்றது. இந்த சென்டிமெண்டல் விஷயத்திற்காகவே அக்காரை தற்போதும் பராமரித்து பயன்படுத்தி வருகின்றார் சோனு.

இக்கார், சோனுவின் பஞ்சாப்பில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, பஞ்சாப் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் தனது பழைய வாழ்க்கைய நினைவு கொள்ளும் விதமாக, மாருதி ஜென் காரில் ரைட் செய்வதை சோனு வழக்கமாகக் கொண்டிருக்கின்ரார். இந்த கார் விற்பனைக்கு வந்த புதிதில் பிரிமியம் ரக ஹேட்ச்பேக் காராக சந்தையில் காட்சியளித்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








