இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்.. ஜீப் நிறுவனத்தின் திட்டம் இதுதான்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்வது குறித்த திட்டத்தை ஜீப் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ், டாடா நெக்ஸான் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், பிற கார் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்து ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பார்த்தா தத்தா மணிகன்ட்ரோல் பத்திரிக்கைக்கு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், "உலகளாவிய கார் சந்தையை மனதில் வைத்து ஃபியட் க்றைஸ்லர் குழுமம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்காக பிரத்யேக எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. எனினும், எங்களிடம் எலெக்ட்ரிக் காருக்கான தொழில்நுட்பம் உள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான புதிய கார் மாடல்களில் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் கொண்டு வருவதற்கான திட்டம் உள்ளது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பை கூர்ந்து கவனித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் ஃபியட் மற்றும் ஜீப் பிராண்டுகளில் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஃபியட் நிறுவனத்தின் விற்பனை படுமோசமாக இருப்பதால், விரைவில் ஃபியட் பிராண்டு இந்திய சந்தையிலிருந்து விலக்கப்பட இருக்கிறது.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் முழு கவனமும் ஜீப் கார்களை விற்பனை செய்வது நோக்கி செல்ல இருக்கிறது. அதன்படி, ஜீப் நிறுவனத்தின் பிராண்டிலேயே புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தற்போது காம்பஸ், காம்பஸ் ட்ரெயில்ஹாக், ரேங்லர், கிராண்ட் செரோக்கீ, கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி உள்ளிட்ட கார் மாடல்களை ஜீப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

ஃபியட் பிராண்டில் விலை குறைவான பட்ஜெட் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே நம்பலாம். இந்திய சந்தையை தொடர்ந்து உற்று கவனித்து பல புதிய மாடல்களை கொண்டு வர இருப்பதாக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது.
Source: Moneycontrol


Click it and Unblock the Notifications








