முதல் ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ கிடையாது... சூப்பர் கடன் திட்டத்தை அறிவித்தது ஃபோர்டு!
வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ஃபோர்டு கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஆட்டோமொபைல் துறைக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. இந்த பெரும் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாவிட்டாலும், வருவாய் இழப்புகளை ஓரளவு மீட்டெடுக்கும் முயற்சிகளில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் புதிய ஃபோர்டு கார்களை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு நெருக்கடிகளை குறைக்கும் விதத்தில் உள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஃப்ரீஸ்டைல், ஆஸ்பயர் மற்றும் ஃபிகோ கார் மாடல்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு கடன் திட்டங்களின்படி, முதல் 6 மாதத்திற்கு மாதத் தவணை கட்டும் அவசியமில்லை. கார் வாங்கி 7வது மாதத்திலிருந்து மாதத் தவணையை கட்டத் துவங்கினால் போதுமானது. அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மாதத் தவணை திட்டத்துடன் இந்த கடன் திட்டத்தை மேற்கண்ட ஃபோர்டு கார்களுக்கு பெற முடியும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு ரூ.2,362 என்ற மாதத் தவணை என்ற அடிப்படையில் கடன் திட்டத்தை பெறும் வாய்ப்புள்ளது. மேலும், 8.99 சதவீத வட்டியில் கார் கடன் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஆஸ்பயர் மற்றும் ஃபிகோ கார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு ரூ.2,394 என்ற மாதத் தவணை திட்டத்தை பெறும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்திற்கு 9.50 சதவீதம் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ஸ்டெப் அப் கடன் திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,727 மாதத் தவணையில் கடன் பெறும் வாய்ப்பு இருக்கிறது. 8.99 சதவீத வட்டியில் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் முதலில் மாதத் தவணை குறைவாகவும், பின்னர் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் இந்த கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஆஸ்பயர், ஃபிகோ கார்களுக்கு லட்சத்திற்கு ரூ.1,777 மாதத் தவணையும், 10.15 சதவீத வட்டி விகிதமும் கொடுக்கப்படுகிறது. எண்டெவர் எஸ்யூவிக்கு எந்த சிறப்பு கடன் திட்டமும் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications