கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தியா வரும் புதிய ஃபோர்டு மஸ்டாங்!
அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த விபரங்கள் மற்றும் இந்திய வருகை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டில் ஃபோர்டு மஸ்டாங் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. சரியான விலை, வசீகரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்து விதத்திலும் இந்திய வாடிக்கையாளர்களை துவக்கம் முதலே கவர்ந்துவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரையில் 450 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் கடந்த 2018ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலானது வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இடைக்கால புனரமைப்பு பணிகள் செய்யப்பட்ட இந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

இந்த புதிய மாடலில் புதிய பானட் அமைப்பு, மறுவடிவமைப்பு பெற்ற க்ரில் அமைப்பு மற்றும் ஹெட்லைட்டுகள், கூடுதல் வசீகரத்தை தரும் வகையிலான பம்பர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக தெரிவதுடன் பழைய மாடலில் இருந்து இதனை வேறுபடுத்துகிறது.

புதிய மஸ்டாங் காரில் எல்இடி லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சாஃப்ட் டச் பிளாஸ்டிக் பாகங்களுடன் உட்புறத்தின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 569 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் பேடில் ஷிஃப்ட் வசதி, முன்புற சக்கரங்களில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 352 மிமீ டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ரூ.75 லட்சம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








