ஃபோர்டு நிறுவனத்தின் லிங்கன் சொகுசு கார்கள் இந்தியா வருகின்றன?
ஃபோர்டு நிறுவனத்தின் லிங்கன் சொகுசு கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் லிங்கன் என்ற பெயரில் சொகுசு கார்களை விற்பனை செ்யது வருகிறது. 1917ம் ஆண்டு துவங்கப்பட்ட லிங்கன் சொகுசு கார் நிறுவனத்தை 1922ம் ஆண்டு ஃபோர்டு கையகப்படுத்தி, அதுமுதல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த நிலையில், நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க லிங்கன் சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஃபோர்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, லிங்கன் பிராண்டுக்கு இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு செய்வதற்கு ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால், லிங்கன் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டத்தில் ஃபோர்டு இறங்கி உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மோட்டார்பீம் தளம் வழியாக இந்த செய்தி வந்துள்ளது.

லிங்கன் பிராண்டில் நேவிகேட்டர், ஏவியேட்டர், நாட்டிலஸ், கார்செயிர், கான்டினென்டல், MKZ மற்ரும் பிளாக் லேபிள் ஆகிய கார் சொகுசு கார் மாடல்களை ஃபோர்டு விற்பனை செய்து வருகிறது. மேலும், லிங்கன் பிராண்டின் லிமோசின் வகை சொகுசு கார்கள் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ மாடல்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

லிங்கன் சொகுசு கார்கள் சீனா, தென்கொரியா, மத்திய கிழக்கு நாடுகளில் சிரியா மற்றும் ஈரான் தவிர்த்து பிற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில், லிங்கன் நேவிகேட்டர் மற்றும் கான்டினென்டல் ஆகிய மாடல்கள் உலக அளவில் லிங்கன் பிராண்டின் மிகவும் பிரபலமான மாடல்களாக உள்ளன. லிங்கன் நேவிகேட்டர் என்ற மாடலானது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட சொகுசு எஸ்யூவி மாடலாக உள்ளது.

இந்த மாடலானது 400 பிஎச்பி பவரையும், 562 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் 494 பிஎச்பி பவரையும், 854 என்எம் டார்க் திறனயைும் வழங்கும் ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் மாடலிலும் கிடைக்கிறது. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து லிங்கன் கான்டினென்டல் அந்நிறுவனத்தின் சொகுசு செடான் கார் மாடலாக விற்பனையில் உள்ளது. இந்த மாடலில் 400 பிஎச்பி பவரையும், 542 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது.

ஒருவேளை லிங்கன் பிராண்டு இந்தியாவில் களமிறக்கப்பட்டால், இந்த இரண்டு மாடல்களும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை இல்லை. ஆனால், விரைவில் இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








