அமெரிக்கர்களுக்கு பிடித்த ட்ரக், ஃபோர்டு எஃப்-150... எலக்ட்ரிக் வெர்சனில் தயாராகிறது!!
அமெரிக்காவில் விற்பனையில் சக்கைபோடு போட்டுவரும் எஃப்-150 ட்ரக்கின் எலக்ட்ரிக் வெர்சன் பனி மிகுந்த பகுதியில் சோதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான ஃபோர்டு மோட்டார்ஸ் முழு எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற படிப்படியாக காய் நகர்த்தி வருகிறது. இதன் முதல் கட்டமாக பிரபலமான தயாரிப்புகளை எலக்ட்ரிக் வெர்சனில் இந்த நிறுவனம் கொண்டுவர ஆயத்தமாகி வருகிறது.

இதன்படி ஃபோர்டின் தாயகமான அமெரிக்காவில் விற்பனையில் பல ஆண்டுகளாக ஜொலித்துவரும் எஃப்-150 ட்ரக் மாடல் எலக்ட்ரிக் மோட்டார் உடன் கொண்டுவரப்படுகிறது. 2022ல் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ட்ரக்கை பற்றிய தகவல் எதுவும் பெரியளவில் நமக்கு கிடைக்காமல் இருந்தது.

ஆனால் தற்போது எஃப்-150 எலக்ட்ரிக் ட்ரக் ஒன்று பனி நிறைந்த பகுதியில் ஆக்ரோஷமாக இயக்கப்படுவது போன்ற வீடியோவினை ஃபோர்டு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோவில் பனி பரப்பில் எஃப்-150 எலக்ட்ரிக் ட்ரக்கின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்கள் சிறியதாக இருப்பதால், மின்சார டிரைவ் ட்ரெயின்களை இரட்டை மோட்டார்கள் கொண்டு வடிவமைக்க முடியும்.

இது அனைத்து சக்கர ட்ரைவையும் மிக விரைவான ட்ராக்ஷனையும் வழங்கும். இதனை வீடியோ பார்க்கும்போது தெளிவாக அறிய முடிகிறது. ஆனால் எஃப்-150 எலக்ட்ரிக் ட்ரக்கில் வழங்கப்படும் தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இந்த வீடியோவில் வெளிப்படுத்தப்படவில்லை.

முன்னதாக இந்த எலக்ட்ரிக் வாகனம் வருகிற 2021ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ட்ரக்கின் தயாரிப்பு பணிகள் 2022ல் இருந்துதான் துவங்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனால் 2022ஆம் ஆண்டின் முதல் பாதி முடியும் வரையில் எஃப்-150 இவி ட்ரக் விற்பனைக்கு வராது. அதேபோல் டெஸ்லா சைபர்ட்ரக், ரிவியன் மற்றும் ஹம்மர் இவி வாகனங்கள் அறிமுகமானதற்கு பிறகே இந்த ஃபோர்டு தயாரிப்பு வெளிவரும்.


Click it and Unblock the Notifications








