பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்
கொரோனா அச்சம் காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 பந்தய சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இந்த ஆண்டுக்கான (2020 சீசன்) ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொடர்ந்து ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு இயலாத நிலையும், வீரர்களுக்கு தொற்றுப் பரவும் அச்சம் இருந்ததால், பந்தயங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வழிகள் குறித்து ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு ஆராய்ந்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அதேநேரத்தில், கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, முதல்கட்டமாக பார்வையாளர்கள் இல்லாமல் குறிப்பிட்ட ஃபார்முலா-1 பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக 1.50 லட்சம் பேர் வரை ஒரு கார் பந்தயத்தை காண்பதற்கு வருகை தருவர். இதன் மூலமாக கொரோனோ தொற்றும் அபாயம் உள்ளதை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அடுத்த சில மாதங்களில் நிலைமையை ஆராய்ந்து, அதன் பிறகு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை எந்த ஆரவாரமும் இல்லாமல் ஃபார்முலா-1 பந்தய களத்தில் வீரர்கள் அனலை கிளப்ப தயாராகி வருகின்றனர்.

வாரத்திற்கு இரண்டு பந்தயங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஃபார்முலா-1 அமைப்பு ஆராய்ந்து வருகிறது. இதன்மூலமாக, இந்த சீசனுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து போட்டிகளையும் நடத்தி முடித்துவிட முடியும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.

அதேபோன்று, ஒவ்வொரு அணியும் தலா 130 பணியாளர்களுடன் கார் பந்தய களத்திற்கு வருகை தரும். ஆனால், ஒவ்வொரு அணியும் 80 பேரை மட்டுமே அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஃபார்முலா-1 அமைப்பு தெரிவித்துள்ளது.

பந்தய களத்திற்குள் வரும் அனைத்து வீரர்கள், அவர்களது அணி வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். சமூக இடைவெளி விதிகளும் பின்பற்றப்படும் என்றும் ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு தெரிவித்துள்ளது.

ஃபார்முலா-1 பந்தயங்களை களத்தில் பெரும் ஆரவாரத்துடன், நேரடியாக பார்க்க முடியாத வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தாலும், சில பந்தயங்களை தொலைக்காட்சி மூலமாக நேரலையில் காணும் வாய்ப்பு இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதலாம்.


Click it and Unblock the Notifications








