காலாவதியான வாகன ஆவணங்களுக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கியது மத்திய அரசு!
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.

கொரோனா பிரச்னை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கொரோனாவை நினைத்தபடி கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை மனதில் வைத்து கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதுடன், அரசு அலுவலக சேவைகள் முழு வீச்சில் நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இதனை மனதில் வைத்து பல்வேறு சலுகைகளையும், கால நீட்டிப்பையும் அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், காலாவதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களுக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1ந் தேதி முதல் ஜூன் 30ந் தேதி இடையிலான காலக்கட்டத்தில் காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, மேற்கண்ட காலத்திற்கு இடையில் காலாவதியாகும் வாகனப் பதிவு சான்று, பர்மிட், ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச் சான்று உள்ளிட்டவை வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள சூழலில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட காரணங்களுக்காக குறைவான பணியாளர்களே பணிக்கு வருகை தருகின்றனர். மேலும், கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இதனை மனதில் வைத்து இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு சற்றே நிம்மதி தரும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்த கால நீட்டிப்பு காலத்திற்கான அபராதக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதுவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம். இதுதொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








