டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பரவல் தாக்கத்தை கருத்தில்கொண்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் மத்திய அரசு நீடித்துள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் அரசு சேவைகள் முற்றிலுமாக முடங்கின. இதையடுத்து, வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்கள் வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பொது முடக்கம் சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனை மனதில் வைத்தும், வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களின் நிலையை கருத்தில்கொண்டும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டது.

இதுவரை மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 31ந் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், பெர்மிட் மற்றும் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏராளமானோர் வரும் வாய்ப்பு இருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றின் காலாவதி காலத்தை தாண்டினாலும் தொடர்ந்து வரும் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை பயன்படுத்த இயலும். அதற்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம் என்பதை வாகன ஓட்டிகள் நினைவில் கொள்வது அவசியம்.


Click it and Unblock the Notifications








