ஹோண்டா அமேஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!
ஹோண்டா அமேஸ் காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் செடான் கார் சந்தையில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் கார் விளங்குகிறது. இந்த சந்தையில் விற்பனையில் இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஹோண்டா அமேஸ் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடல்களின் விலை ரூ.9,000 முதல் ரூ.17,000 வரையிலும், டீசல் மாடலின் விலை ரூ.27,000 முதல் ரூ.51,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பிஎஸ்-6 எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பிஎஸ்-4 மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பிஎஸ்-6 மாடல் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.6 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லிட்டருக்கு 1 கிமீ மைலேஜ் குறைந்துள்ளது. அதேபோன்று, பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19 கிமீ என்ற அளவிலிருந்து 18.3 கிமீ என்ற அளவில் குறைந்துவிட்டது.

இதேபோன்று, டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மாடலில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் சிவிடி மாடல் 79 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் பெற்றிருக்கிறது.

இந்த காரின் மேனுவல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 2.7 கிமீ வரையிலும், சிவிடி மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 2.8 கிமீ வரையிலும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காரின் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருப்பதை தவிர்த்து, வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த காரில் எல்இடி பொசிஷன் விளக்குகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், அலாய் வீல்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

புதிய ஹோண்டா அமேஸ் பிஎஸ்-6 கார் ரூ.6.09 லட்சம் முதல் ரூ.9.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மாருதி டிசையர், ஹூண்டாய் அவ்ரா, ஃபோர்டு ஆஸ்பயர், டாடா டிகோர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








