ஹோண்டா சிட்டி பிஎஸ்6 மாடல் மீது ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட்!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிட்டி, அமேஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஹோண்டா கார் நிறுவனம் வழங்குகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கார் விற்பனை அடியோடு பாதித்துள்ள நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் வீடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து முன்பதிவு செய்ய வைக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

அதன்படி, ஹோண்டா கார் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மாடல்களான அமேஸ் மற்றும் சிட்டி கார்களுக்கு சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் புக்கிங் செய்வோருக்கு இந்த சிறப்புச் சலுகைகள் பொருந்தும்.

முதலாவதாக இரண்டு கார்களுக்கும் வழங்கப்படும் ஆண்டு பராமரிப்புத் திட்டத்திற்கான கட்டணத்தில் 50 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க விஷயமாக இருக்கும்.

அடுத்து அமேஸ் காருக்கு ரூ.32,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. வேரியண்ட்டை பொறுத்து இந்த சேமிப்பு அமையும். மேலும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கான கூடுதல் வாரண்டி திட்டத்தையும் பெற முடியும்.

கார் எக்ஸ்சேஞ்ச் செய்யாதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை ஆண்டு பராமரிப்பு திட்டமும், 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கான கூடுதல் வாரண்டி திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்து ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும் எஸ்வி, வி மற்றும் சிவிடி கியர்பாக்ஸுடன் கிடைக்கும் வி வேரியண்ட்டுகளுக்கு ரூ.45,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படும்.

நடுத்தர விலை கொண்ட விஎக்ஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.37,000 வரை தள்ளுபடியும், ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடியும் பெற முடியும். ஹோண்டா சிட்டி காரின் இசட்எக்ஸ் மேனுவல், விஎக்ஸ் சிவிடி மற்றும் இசட்எக்ஸ் சிவிடி வேரியண்ட்டுகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடியும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெற முடியும்.

ஹோண்டா சிட்டி கார் ரூ.9.91 லட்சம் முதல் ரூ.14.31 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் மிக விரைவில் இந்தியாவிற்கு வர இருக்கும் நிலையில், இந்த அதிரடி ஆஃபரை ஹோண்டா வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








