இனி தப்பு பண்ணக்கூடாது... இந்தியர்களுக்கு தோதுவான எஸ்யூவி... ஹோண்டாவின் அதிரடி திட்டம்!
இனி இந்திய வர்த்தகத்தில் எந்த தவறையும் செய்துவிடக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கும் ஹோண்டா நிறுவனம், வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. வர்த்தக வளர்ச்சியை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தும் விதமாக, புத்தம் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் இருந்து வருகிறது. ஆனாலும், எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா கார் நிறுவனம் விற்பனையில் கடும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியர்களுக்கு தோதுவான கார் மாடல்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. அதுவும் ஹோண்டா சிட்டி காரைவிட விலை குறைவான மார்க்கெட்டில் தனது கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, க்ரெடடாவுக்கு நேரடி போட்டியை தரும் வகையிலான தனது எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வர ஹோண்டா முடிவு செய்துள்ளதாக கார்டாக் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஹோண்டா எச்ஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி பல வெளிநாடுகளில் விற்பனையில் வைக்கப்ப்டடுள்ளது. தற்போதைய மாடலானது அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட காலம் ஆன நிலையில், இந்த மாடல் இந்தியா வருவது சந்தேகம். எனவே, அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள மூன்றாம் தலைமுறை ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும், இந்த புதிய எஸ்யூவியை போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் ஹோண்டா பாரம்பரியத்தை பரைசாற்றும் பெரிய வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பாடி கிளாடிங் சட்டங்கள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கும்.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட், 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா வரும்போது ஹோண்டா சிட்டியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் இதில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் புதிய எச்ஆர்வி எஸ்யூவி ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் வலுசேர்க்கும் என்று கருதப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு அல்லது 2022ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








