புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகமாகிறது... முக்கிய விபரங்கள்!
புதிய ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ்6 மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மேலும், இந்த காரின் முக்கிய விபரங்களும் வெளியாகி இருக்கின்றன.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா ஜாஸ் கார் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த மாடல் விற்பனையில் இருந்து வரும் நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால் புதிய பொலிவுடன், பிஎஸ்6 எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

ஏற்கனவே, நான்காம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் சிறிய மாற்றங்களுடன், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பான எஞ்சினுடன் இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக டீசரும் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது புதிய ஹோண்டா ஜாஸ் கார் குறித்த சில முக்கிய விஷயங்களும் தெரிய வந்துள்ளன.இதன்படி, காரில் சில முக்கிய மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக கொண்டு வரப்படுகிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகல் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெற இருக்கின்றன. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் பிஎஸ்6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஏற்கனவே இந்த காரில் வழங்கப்பட்டு வந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு பிஎஸ்6 மாடலில் இடம்பெறாது என்று எக்ஸ்பிரஸ் டிரைவ்ஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 80 சதவீத வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலுக்கே முன்னுரிமை கொடுப்பதால், டீசல் எஞ்சினை கழற்றிவிட ஹோண்டா முடிவு செய்துள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா, டாடா அல்ட்ராஸ் கார்களுடன் போட்டி போடும்.

தற்போதைக்கு பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில், டாடா அல்ட்ராஸ் காரில் மட்டுமே தற்போது டீசல் எஞ்சின் தேர்வு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படும் புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். அதுவரை இந்த ரகத்தில் பெட்ரோல் மாடல்களின் ஆதிக்கம் தொடரும்.


Click it and Unblock the Notifications








