மீண்டும் தயாரிப்பு பணிகளை துவங்க ஆயத்தமாகும் ஹோண்டா & யமஹா..
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளை மீண்டும் துவங்க அரசாங்கத்திடம் இருந்து அனுமதியை பெற்றுள்ளது. ஹோண்டா மட்டுமின்றி யமஹா நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிப்பு பணிகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளன. கொரோனா வைரஸ் பரவலினால் இந்தியாவில் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மிக பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது.

இதில் ஆட்டோமொபைல் துறையும் தப்பவில்லை. உலகின் மிக பெரிய இருசக்கர வாகன சந்தையான இந்தியாவில் ஊரடங்கினால் தொழிற்சாலைகள் மற்றும் டீலர்ஷிப்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசும் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல விதமான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் தான் உள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே தொழிற்சாலைகளை திறப்பதற்கான அனுமதியினை வழங்கிவிட்ட நிலையில் யமஹா நிறுவனம் சில கட்டுப்பாடுகளுக்கு இணங்கி தயாரிப்பு பணிகளை துவங்க ஆயத்தமாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் வாகனங்களின் பாகங்களை வழங்கும் நிறுவனங்கள் லாக்டவுனால் மூடப்பட்டு உள்ளதால் ஹோண்டா நிறுவனம் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க சில நாட்களை எடுத்து கொள்ளும் என்றே தெரிகிறது.

இதுமட்டுமின்றி சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர் திரும்ப முடியாத சூழல் நிலவுவதும் மீண்டும் தயாரிப்பை ஆரம்பிக்க எண்ணும் ஹோண்டா, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு சிறிது பின்னடைவே. ஏனெனில் இந்தியாவில் பேருந்து, இரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து கடந்த ஒரு மாதம் காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள் தான் இருந்தாலும், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை சிறுக சிறுக அதிகரித்தவாறே உள்ளது. இதனால் ஊரடங்கு அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இருப்பினும் இவ்வாறு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் இருந்து ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளுக்கு சிறிது விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இத்தகைய ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மற்ற இதர சிறு நிறுவனங்களின் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தை பொறுத்த வரையில், இந்தியாவில் ஹரியானாவின் மனேசர், ராஜஸ்தானின் டபுகாரா, கர்நாடகாவின் நர்சபுரா மற்றும் குஜராத் விதாலபுர் என நான்கு பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது.

இவற்றின் மூலமாக ஆண்டுக்கு 64 லட்ச யூனிட் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. யமஹா நிறுவனம் ஹரியானாவின் ஃபரிதாபாத், உத்தர பிரதேசத்தின் சுராஜ்புர் மற்றும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








