தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது ஹூண்டாய்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.

கொரோனா பாதிப்பு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே இரண்டாவது அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் மாறி இருக்கிறது.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சமயத்தில், அனைவரும் நிதி உதவி அளித்து உதவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடி அளித்துள்ளது.

தமிழக தொழிற்துறை முதன்மை செயலாளர் முருகானந்த்திடம் ரூ.5 கோடிக்கான காசோலையை ஹூண்டாய் அதிகாரிகள் நேரில் வழங்கியதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் கூறுகையில்,"இந்த சவாலான நேரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எங்களது தாய் வீடு போல விளங்கும் தமிழகத்திற்கும், மக்களுக்கும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முற்பட்டு வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கார் ஆலை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகத்தில் செய்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான அரசு முயற்சிகளுக்கும் உற்ற துணையாக நிற்பதாக அறிவித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பிற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆய்வுக் கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களையும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.

முக கவசங்கள், வென்டிலேட்டர் கருவிகள், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவற்றையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு தேவையான கிருமி நாசினி திரவத்தையும் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால் சென்னையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அந்நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பு நடிவடிக்கையில் தமிழக அரசுக்கு உறுதுணையாக பல்வேறு நிதி உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








