ஹூண்டாய் அவ்ரா காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!
புதிய ஹூண்டாய் அவ்ரா காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் புதிய தலைமுறை மாடலானது நியோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இதன் செடான் ரக மாடலும் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 21ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய ஹூண்டாய் அவ்ரா காம்பேக்ட் செடான் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.10,000 முன்பணத்துடன் ஹூண்டாய் அவ்ரா இணைய பக்கம் அல்லது டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் முகப்பு நியோஸ் காரை ஒத்திருந்தாலும் சிறிய மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செடான் கார் ரகத்திற்கு மாறி இருக்கிறது.
இந்த காரின் இன்டீரியர் அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனாலும், நியோஸ் காரின் இன்டீரியர் தீம் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

ஃப்ளோட்டிங் வகை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

ஹூண்டாய் அவ்ரா காரில் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சி பில்லர் அமைப்பு, பூமராங் வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். இது காரின் வசீகரத்தை கூட்டுகிறது.

புதிய ஹூண்டாய் அவ்ரா காரில் பிஎஸ்-6 எஞ்சின்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு தரத்தையும் பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் அவ்ரா கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார்களுடன் நேரடியாக மோதும்.


Click it and Unblock the Notifications








