ஹூண்டாய் அவ்ரா காரின் இன்டீரியர் அம்சங்கள் வெளியானது!
ஹூண்டாய் அவ்ரா காம்பேக்ட் செடான் காரின் இன்டீரியர் அம்சங்களை காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது. படங்களுடன் தகவல்களை பார்க்கலாம்.

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் அவ்ரா என்ற புதிய கார் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக இது உருவாக்கப்படடு இருக்கிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் அவ்ரா செடான் கார் அண்மையில் இந்தியாவில் வைத்து வெளியிடப்பட்டது. அந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹூண்டாய் அவ்ரா காரின் இன்டீரியரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஹூண்டாய் அவ்ரா காருக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோ விளம்பரத்தில் இன்டீரியர் அம்சங்களை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே அனைவரும் கணித்தபடியே, கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் இன்டீரியர் அம்சங்கள் அப்படியே இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அடர் வண்ணத்தில் இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருப்பது வேறுபடுத்தும் விஷயமாக கூறலாம்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி இடம்பெற்றுள்ளது. பீஜ் வண்ண இருக்கைகள் உள்ளன.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மேலும், 5.3 அங்குல டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளது. அனலாக் டாக்கோமீட்டர் இடம்பெற்றிருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்திற்காக சிறிய திரை அமைப்பும் உள்ளது.

ஹூண்டாய் அவ்ரா காரில் வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் அவ்ரா செடான் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இரண்டாவதாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இடம்பெற்றிருக்கும்.

வரும் 21ந் தேதி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








