சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி!
மாருதி கார் ஆலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், சென்னை ஹூண்டாய் கார் ஆலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் ஆலை கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது. அதிலிருந்து ஒன்றரை மாதங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த 8ந் தேதி முதல் அங்கு உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன.

அரசு வழிகாட்டு முறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சென்னை ஹூண்டாய் ஆலையில் கார் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில், தனது சென்னை ஆலையில் பணிபுரிந்து வரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலமாக தெரிவித்துள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

சென்னை ஆலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூவரும் இப்போது வேகமாக குணமடைந்து வருகின்றனர். இதுதொடர்பான விபரங்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதுடன், ஆலையில் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்த பின்னர், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை ஆலையை திறந்தது. இந்த சூழலில், தற்போது அங்கு பணிபுரிந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அந்நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரிவோர் மத்தியிலும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆலைக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் உரிய பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஆலைக்குள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்புப் பணிகளுடன் சென்னை ஹூண்டாய் ஆலையில் உற்பத்திப் பணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications