ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் எஸ்யூவியின் முதல் ஸ்பை படம்!
ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடலின் முதன்முறையாக கேமரா கண்களில் சிக்கி உள்ளது. கூடுதல் விபரங்கள் மற்றும் ஸ்பை படத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா வலம் வருகிறது. அண்மையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இது கூடுதல் மதிப்பாகவும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும்.

இதனை மனதில் வைத்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் குறித்த தகவல்கள் அரசல் புரசலாக வெளியானது.

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் எஸ்யூவியின் ஸ்பை படம் முதல்முறையாக வெளியாகி இருக்கிறது. கொரியாவில் வைத்து இந்த புதிய க்ரெட்டா 7 சீட்டர் மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஹூண்டாய் பாலிசேடு உரிமையாளர் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது.

சாதாரண க்ரெட்டா எஸ்யூவியைவிட இந்த புதிய மாடலில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 5 சீட்டர் மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் புதிய க்ரில் அமைப்பு, க்ரோம் அலங்காரபாகங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

மூன்றாவது இருக்கையை பொருத்துவதற்காக காரின் நீளம் மற்றும் கூரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி பில்லர் தடிமன் குறைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலானது சாதாரண மாடலைவிட 20 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கும் என்று தெரிகிறது. 5 சீட்டர் மாடலானது 2,610 மிமீ நீளம் பெற்றிருக்கும் நிலையில், 7 சீட்டர் மாடலானது 2,630 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். மேலும், 7 சீட்டர் மாடலின் நீளம் 30 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது 5 சீட்டர் மாடலைவிட ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா க்ராவிட்டாஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Image Source - Palisade Owners Club


Click it and Unblock the Notifications








