ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசல் மாடல் விரைவில் அறிமுகம்!
ஹூண்டாய் எலான்ட்ரா காரின் டீசல் மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலான்ட்ரா கார் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ரகத்தில் சிறப்பான அம்சங்களுடன் இந்த கார் வசீகரித்து வருகிறது.

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் எலான்ட்ரா காரில் டீசல் எஞ்சின் மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடல் போன்றே, டீசல் மாடலிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் டீசல் மாடலானது எஸ், எஸ்எக்ஸ் என இரண்டு வேரிண்ட்டுகளில் கிடைக்கும். இந்த இரண்டு வேரியண்ட்டுகளிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் கிடைக்கிறது.

அதேபோன்று, உட்புறத்தில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், வென்டிலேடட் இருக்கைகள், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்துவரையில், ஆறு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் கேமரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அத்தியாவசியமான தொழில்நுட்பங்கள் இடம்பெறும்.

ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் டீசல் மாடலானது ரூ.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலிருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் வேரியண்ட்டுகள் ரூ.15.89 லட்சம் முதல் ரூ.20.39 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார்களுடன் போட்டி போடும்.
Source: Cardekho


Click it and Unblock the Notifications








