ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தமா..?
சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவில் பிரபலமான மாடல் காராக உள்ள ஐ20 ஆக்டிவ் மாடலின் பெயரை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் நீக்கியுள்ளது. இதில் இருந்து இந்த ஹேட்ச்பேக் மாடலின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மாடலின் இந்த தற்காலிக விற்பனை நிறுத்தத்திற்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் மிக முக்கிய காரணமாக உள்ளது.

வழக்கமான ஹேட்ச்பேக் மாடலுடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ், வித்தியாசமான அலாய் சக்கரங்களையும், க்ராஸ்-ஓவர் கார்களுக்கு உண்டான ரூஃப் ரெயில் உள்ளிட்ட பாகங்களையும், முன்புறம் மற்றும் பின்புறத்தில் சில்வர் ஸ்கஃப் மற்றும் கருமையான நிறத்தில் பிளாஸ்டிக் பாடி க்ளாடிங்கையும் கொண்டுள்ளது.

இதனால் சாஃப்ட்-க்ராஸ்ஓவர் தோற்றத்திலும் காட்சியளிக்கின்ற இந்த ஹேட்ச்பேக் மாடல், வழக்கமான ஹேட்ச்பேக்களுடன் தனது என்ஜின் தேர்வுகளை பகிர்ந்துள்ளது. இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஐ20 ஆக்டிவ் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.

இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் உள்ள 1.2 லிட்டர் என்ஜின் 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்கவல்லது. இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு 89 பிஎச்பி பவரையும் 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வந்தது.

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த என்ஜின் தேர்வுகளுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அறிமுகத்தின்போது கொடுக்கப்பட்டது. பின்னர் இதன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் இணைந்து கொண்டது.

புதிய பிஎஸ்6 ஐ20 மாடலும் இந்தியாவில் தற்போது உள்ள அதே இரு என்ஜின் தேர்வுகள் உடன் தான் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை குறைந்த மாடல்கள் மட்டும் தான், தற்போது உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அப்படியே பெறவுள்ளன.

விலையுயர்ந்த பெட்ரோல் வேரியண்ட்கள் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெறும் என கூறப்படுகிறது. மேலும் டீசல் என்ஜின் தேர்வும் கியா செல்டோஸ் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜினின் மறு உருவாக்கமாக இருக்கும் என்றே தெரிகிறது.

இதன் அடுத்த தலைமுறை மாடல் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் வகையில் இதன் டீசல் வேரியண்ட் என்ற பெயரில் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவா மாடல் சமீபத்தில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டது.

இது உண்மையில் ஐ20 மாடலின் அடுத்த தலைமுறை காரின் வேரியண்ட்களுள் ஒன்றா என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கிடையில் ஹூண்டாய் நிறுவனமும் அவ்வப்போது இந்த புதிய வெர்சன் ஐ20 மாடலின் ஸ்கெட்ச் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவாறு உள்ளது.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் புகைப்படங்களின் மூலம் இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புற பகுதிகள் முற்றிலும் மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்திருந்தது. இதனால் குடும்பமாக போக்குவரத்தை மேற்கொள்ள விரும்புவோர்க்கு மிகவும் பரிச்சயமான வாகனமாக இது அமையும்.

உட்புறத்தில் ஏற்கன்வே கூறியதுபோல் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை இந்த ஹேட்ச்பேக் மாடல் பெற்றுள்ளது. இந்த புதிய கன்சோல் அமைப்பு குறைந்தது இந்த மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்களிலாவது வழங்கப்படும்.

இவற்றுடன் சில இணைப்பு தொழிற்நுட்பங்கள் மற்றும் அப்டேட்டான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் பெற்று புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் சந்தையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐ20 மாடல் இந்திய சந்தையில் இந்த 2020ஆம் வருடத்தின் மத்தியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications