ஹூண்டாய் லீ ஃபில் ரோக் கான்செப்ட் கார் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படுகிறது
ஹூண்டாய் லீ ஃபில் ரோக் கான்செப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த அசத்தலான காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2018ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் ஹூண்டாய் நிறுவனம் லீ ஃபில் ரோக் என்ற கான்செப்ட் கார் ஒன்றை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. ஸ்போர்ட்ஸ் கூபே ரகத்திலான இந்த கார் பார்வையாளர்களை கவர்ந்தது.

1974ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஹூண்டாய் கூபே கான்செப்ட் அடிப்படையிலான சில அம்சங்களுடன் இன்றைய நவீன யுகத்திற்கு தக்கவாறான பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தலான டிசைனில் இந்த கார் பெரிய சக்கரங்கள், அதிக வீல் பேஸ் நீளம் மற்றும் தனித்துவமான பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஹூண்டாய் நிறுவனத்தின் வடிவமைப்பு திறனை பல படிகள் மேலே கொண்டு செல்லும் வகையில் இருக்கிறது.

முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, அழகிய அலாய் வீல்கள், உப்பலாக டிசைன் செய்யப்பட்ட பின்புற புட்டம் என ரசித்து இந்த காரை வடிவமைத்துள்ளனர் ஹூண்டாய் வடிவமைப்பு பொறியாளர்கள்.

இந்த காரின் இருக்கை அமைப்பும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டு அமைப்பு சிறப்பாக இருக்கிறது.

உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதி, சோர்வு தராத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இருக்கைகள், செவ்வக வடிவிலான ஸ்டீயரிங் வீல், பின் இருக்கை பயணிகளுக்கான தனி கட்டுப்பாட்டு திரை போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஹூண்டாய் லீ ஃபில் ரோக் கான்செப்ட் காரின் டிசைன் அம்சங்களிலிருந்து 8வது தலைமுறை சொனாட்டா, 3வது தலைமுறை கிராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா ஆகிய கார்களின் டிசைன் அம்சங்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் மற்றும் அவ்ரா கார்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், அடுத்து புதிய தலைமுறை சொனாட்டா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்து டூஸான் எஸ்யூவியும் இந்த பட்டியலில் உள்ளது.

தவிரவும், இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரின் சில டிசைன் அம்சங்கள் லீ ஃபில் ரோக் கான்செப்ட் மாடலிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு புதிய ஹூண்டாய் கார்கள் இந்த லீ ஃபில் ரோக் கான்செப்ட் சில டிசைன் அம்சங்களை பெற்றுள்ளதால், இந்த காரை பார்ப்பதற்கு ஆட்டோ எக்ஸ்போவை எதிர்நோக்கி இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








