சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என புதுப்புது எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் வரிசையாக அறிமுகமாகி வருகின்றன. இதற்கு மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வரும் ஊக்கமும் ஒரு காரணமாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை கணிசமாக குறைக்க முடியும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை குறைந்து, பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் தற்போது கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களில் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் ஆகியவை முக்கியமானவை. இவை இரண்டுமே எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள்தான்.

ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாக உள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 23 லட்ச ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. அதே சமயம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இன்றுதான் (ஜனவரி 23) இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலையே 20.88 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு ஏற்ப ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்கள் மதிப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 20 லட்ச ரூபாய்க்கும் மேல் இருப்பதால், நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற தயாரிப்புகளாக இவை இருக்காது. இருப்பினும் ஓரளவிற்கு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய பல்வேறு முன்னணி நிறுவனங்களும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இதில், ரெனால்ட், எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் எம்ஜி நிறுவனமும் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வரிசையில், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனமும், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எஸ்.கிம் கூறுகையில், ''இந்திய மார்க்கெட்டிற்கு பசுமை வாகனங்களை கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அத்துடன் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் பணிகளையும் செய்து வருகிறது'' என்றார்.

ஆனால் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற சரியான தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அது நிச்சயம் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








