ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...
புதிய 2020 ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 எஸ்யூவி மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் வெளிவந்துள்ள இந்த புதிய பிஎஸ்6 காரை பற்றிய சில தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

2016ல் ஹூண்டாய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தபட்ட டூஸான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடந்த ஆண்டில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த கார் இதற்கு முன்பும் சில முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டிருந்தது.

இத்தகைய சோதனை ஓட்டங்களின் புகைப்படங்கள் மூலம் இந்த 2020 ஹூண்டாய் டூஸான் மாடல் லெட் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் ஃபாக் விளக்குகளை சுற்றிலும், முன்புற பம்பரின் இருமுனைகளிலும் டிஆர்எல்களை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

குறிப்பாக முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்கள் புதிய வடிவை பெற்றுள்ளன. கம்பீரமான தோற்றத்திற்காக புதிய மற்றும் அகலமான க்ரில் இந்த 2020 எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில் இந்த புதிய கார் மிகவும் குறைவான டிசைன் மாற்றங்களையே ஏற்றுள்ளது.

ஆனால் இந்த 2020 டூஸான் பிஎஸ்6 கார் புதிய மெஷின்-கட் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது. இவற்றுடன் எரிபொருள் நிரப்பும் பகுதியில் உள்ள மூடி மற்றும் டெயில்கேட் போன்றவையும் அப்டேட்டை பெற்றுள்ளன. பின்புற டெயில்லைட் இந்த சோதனை ஓட்ட மாடலில் பிளவுப்பட்டதாகவும், முழுவதும் எல்இடி-க்கு மாற்றப்பட்டதாகவும் உள்ளது.

காரை சுற்றிலும் க்ரோம்கள் பளபளப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை டூஸான் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு ப்ரீமியம் லுக்கை தருகின்றன. உட்புறத்தில் இந்த 2020 மாடல், ப்ளூலிங்க் இணைப்பு உள்பட அதிக எண்ணிக்கையில் தொழிற்நுட்ப வசதிகளையும், 3டி மேப்பையும், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏசி காற்றை வெளியிடும் பகுதியை சுற்றிலும் பிரகாசமான பாகங்களுடன் உள்ள ட்யூல்-டோன் டேஸ்போர்டு உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமிராவுடன் அறிமுகமாகவுள்ள இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடல், காருடன் பொருந்தி போகக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோலையும் தன்னுள் கொண்டிருக்கும்.

இயந்திர பாகங்களை பொறுத்தவரை, தற்போதைய மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை தான் பிஎஸ்6 தரத்தில் இந்த 2020 மாடல் பெற்றுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 154 பிஎச்பி பவர்/192 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 185 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகின்றன.

இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. டூஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் டீசல் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதலாக ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் கொடுக்கப்படவுள்ளது.

இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் விலையை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் நிர்ணயிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்சமயம் சந்தையில் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் டூஸான் மாடல் சிகேடி முறையில் (பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படுவது) இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய டூஸான் மாடல் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களையும் புதிய டிசைன் மாற்றங்களையும் பெற்றுள்ளதால், இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும் என்பது உறுதி. அறிமுகத்திற்கு பிறகு இந்த பிஎஸ்6 மாடலுடன் போட்டியிடுவதற்காக ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல்கள் தயாராகவுள்ளன.
Image Courtesy: MotorBeam


Click it and Unblock the Notifications








