ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்!
புதுப்பொலிவுடன் வரும் ஹூண்டாய் வெர்னா காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் எப்போதுமே கடுமையான சந்தைப் போட்டி இருந்து வருகிறது. குறிப்பாக, டாப் 3 இடங்களில் உள்ள மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் ஹூண்டாய் வெர்னா கார் புதிய பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட இந்த புதிய ஹூண்டாய் வெர்னா கார் வரும் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காருக்கு முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.25,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் வர இருப்பதால், இந்த புதிய மாற்றங்கள் கொண்ட ஹூண்டாய் வெர்னா கார் மிகவும் அவசியமாகி உள்ளது. இந்த காரின் டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய க்ரில் அமைப்பு, கவர்ச்சிகரமான டியூவல் டோன் அலாய் வீல்கள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக கவரும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்துடன் நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக செயல்படும் புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலியும் கொடுக்கப்பட உள்ளது.

இந்த புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோன் மூலமாக ரிமோட் கன்ட்ரோல் முறையில் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது, ஏசியை முன்கூட்டியே ஆன் செய்வது, கார் இருப்பிடத்தை கண்டறிவது, நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும். கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

தவிரவும், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும், டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டார்க் கன்வெர்ட்டர் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது. மூன்று எஞ்சின் தேர்வுகளுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பதுடன், ஹூண்டாய் வெனியூ காரில் ஏற்கனவை பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வரும் 26ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும் என தெரிகிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








