வேகன்ஆர் மின்சார காருக்கான போட்டியாளனை உருவாக்கும் இந்தியாவின் 2ம் ஜாம்பவான்.. இவ்ளோ குறைந்த விலையா?
மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார காராக களமிறங்கும் வேகன்ஆர் எலெக்ட்ரிக் காருக்கு போடியாக ஹூண்டாய் நிறுவனம் விலை குறைந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே செல்கின்றது. இதனை உறுதிச் செய்யும் வகையில் மின் வாகனங்களின் அறிமுகம் அண்மைக் காலங்களாக அதிகரிக்க தொடங்கியிருக்கின்றது.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே வைத்து தயாரித்து புதிய மின்சார கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தென்கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் மின்சார காரை அறிமுகம் செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்நிறுவனம் கோனா என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மின்சார காராகும்.
இதைத்தொடர்ந்து, மலிவு விலை மின்சார காரை களமிறக்க இருப்பதாக ஹூண்டாய் அறிவித்திருக்கின்றது.

ஏற்கனவே சேன்ட்ரோவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் ஒன்று இந்திய சாலைகளில் பல பரீட்சைச் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் உற்பத்தியாலைக்கு அருகில் வைத்து சோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, விலை குறைவான மின்சார காரை அறிமுகம் செய்யும் விதமாக, இந்தியாவிலேயே வைத்து உற்பத்தி புதிய மின்சார காரை தயாரிக்க இருக்கின்றது ஹூண்டாய்.

இந்த மின்சார கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும். இந்த வேகன் ஆர் நடப்பாண்டிற்கு பின்னர் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மாருதி தரப்பிலிருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, இந்திய ஜாம்பவான் நிறுவனமான டாடா அதன் அதிக பாதுகாப்பு கொண்ட மாடலான நெக்ஸானில் மின்சார மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனமும் தனது பங்காக எக்ஸ்யூவி 300 மாடலின் மின்சார மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார்கள் வரவிருக்கும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இந்நிலையில், இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் ஹூண்டாயும், அதன் இரண்டாவது மின்சார காரை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.
இந்த கார் மட்டுமின்றி கூடுதலாக பல மின்சார கார்களையும் களமிறக்க அது திட்டமிட்டிருக்கின்றது. அந்த புதிய மின்சார கார்களை 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யவும் இலக்கு நிர்ணயித்திருக்கின்றது.

ஆகையால், தற்போது எரிபொருள் வாகனங்களைக் கொண்டு செய்யப்படும் புரட்சியைப் போன்று எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாகன சந்தை அதகளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பணியை ஹூண்டாய் ஏற்கனவே தீவிரப்படுத்தியிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய அரசு சிகேடி மற்றும் சிபியு செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை உயர்த்தியிருக்கின்றது. ஆகையால், உள்ளூர் உற்பத்தி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், அனைத்து நிறுவனங்களும் உள்ளூர் மயமாக்கப்பட்ட உற்பத்திக்கு முனைப்பு காட்டி வருகின்றன. அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனமும் அதன் குறிப்பிட்ட தயாரிப்புகளை முழுக்க முழுக்க உள்ளூர் மயமாக்க சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

குறிப்பாக, லித்தியம் அயன் பேட்டரி பரிமாற்றத்திற்காக எல்ஜி நிறுவனத்துடன் ஹூண்டாய் ஒப்பந்தம் ஒன்றை செய்யவிருக்கின்றது. இதற்கான பணிகள் மற்றும் விலை குறைவான மின்சார தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்காக ஓர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து வருகின்றது ஹூண்டாய்.

இந்த நடவடிக்கையின் மூலம் விலை குறைந்த, அதாவது ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான மதிப்பில் மின்சார காரை உற்பத்தி செய்ய இருக்கின்றது ஹூண்டாய்.
இந்த மின்சார கார் மாருதி சுசுகி வேகன்ஆர் இவி, மஹிந்திரா இகேயூவி100 மற்றும் டாடா எச்பிஎக்ஸ் ஆகிய மின்சார கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

தற்போது, சிகேடி வாயிலாக மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய 10 சதவீதம் வரியாக வசூலிக்கப்படுகின்றது. இது வருகின்ற ஏப்ரல் முதல் 15 சதவீதமாக உயரவுள்ளது. இதேபோன்று, இறக்குமதிச் செய்யப்படும் மின் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கான வரியும் 5 முதல் 10 சதவீதம் வரை உயரவுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இறக்குமதி செய்யும் வாகனங்களின் விலை மிக மோசமாக உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவே, உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கு குறைந்தளவு வரியே விதிக்கப்படும். இது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

மேலும், இறக்குமதி வாகனங்களைக்காட்டிலும் குறைவான விலையையே இவை பெறும்.
ஆகையால், இந்திய மக்கள் மத்தியில் உள்ளூர் மின்சார கார்களுக்கு குறிப்பிட்ட வரவேற்பு கிடைக்க இது வழி வகைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Source:Auto Economic Times
புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...


Click it and Unblock the Notifications








