ரூட்டை மாற்றிய பிஎஸ்ஏ... பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!
இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது சிட்ரோன் பிராண்டு கார் மாடல்களுடன் இந்திய சந்தையில் கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தியாவில் முதல் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதையும் அந்த நிறுவனம் உறுதி செய்தது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 129 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 178 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் எஞ்சின் விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. இதனால், பிரிமீயம் ரகத்தில் இந்த மாடல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஏற்கனவே ஓசூரில் உள்ள பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணியின் எஞ்சின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் கொடுக்கப்பட்டால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு கிட்டும்.

ஆனால், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனால், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் விலையில் கணிசமாக உயர்வுக்கு இது வழிவகுக்கும்.

மேலும், இது ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எஞ்சின் விஷயத்தால் விலை பிரிமீயம் எஸ்யூவி மாடல்களை நெருங்கும் வகையில் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம். இதுவும் விலை கணிசமாக நிர்ணயிக்க காரணமாக அமையும். அதாவது, விலை குறைவான வேரியண்ட்டுகள் இருக்காது.

இந்த காரில் ஸ்பிளிட் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். இது 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று பிஎஸ்ஏ குழுமம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஷோரூம்களை அமைக்கும் பணிகளில் பிஎஸ்ஏ குழுமம் தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








