லாக்டவுன் முடிந்தாலும் வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்கள்!
கொரோனா லாக்டவுன் முடிந்தாலும், வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்கள் இருப்பதால் வாகன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த வாரத்துடன் தேசிய ஊரடங்கு முடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பு மேலோங்கினாலும், கொரோனா பரவும் வேகம் காரணமாக, ஊரடங்கை உடனடியாக விலக்க முடியாத அளவுக்கு இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வரும் 4ந் தேதி முதல் தொழிற்சாலைகளில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன நிறுவனங்களும் உற்பத்தியை துவங்குவதற்கு ஆவலோடு காத்திருக்கின்றன.

ஆனால், ஊரடங்கு விதிகளை தளர்த்தினாலும், உடனடியாக வாகன உற்பத்தியை துவங்குவதில் ஏகப்பட்ட சவால்களும், நடைமுறை சிக்கல்களும் இருக்கிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்கள் வர வேண்டி இருக்கும்.

இருப்பில் உள்ள உதிரிபாகங்களை வைத்து ஒரு சில வாரத்திற்கு உற்பத்தி செய்ய முடிந்தாலும், தொடர்ச்சியாக உற்பத்தியை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. சில உதிரிபாக நிறுவனங்கள் அல்லது வாகன உற்பத்தி ஆலைகள் 'ரெட் ஸோன்' வளையப் பகுதியில் இருக்கின்றன. இதனால், அங்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று சங்கிலித் தொடர் போல இருப்பதால், உதிரிபாகங்கள் சப்ளை முழுமையாக சீரடைந்தால் மட்டுமே வாகன உற்பத்தியை முழு வீச்சில் தொடங்க முடியும். அதேபோன்று, வாகன ஆலைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடி கிடப்பதால், பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பின்னரே உற்பத்தி செய்ய முடியும்.

அதேபோன்று, பல ஆயிரம் பேர் பணிபுரியும் கார் ஆலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவதும், தொழிலாளர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதிலும் கால தாமதம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

அதேபோன்று, வாகன விற்பனையும் சீரடைந்தால் மட்டுமே உற்பத்தி செய்யும் வாகனங்களை டீலர்களுக்கு அனுப்புவதில் பயன் இருக்கும். இல்லையெனில், அதிக அளவில் இருப்பில் தேங்கும் அபாயம் இருக்கிறது. இதனை தவிர்க்க, விற்பனை சீரடைந்தால் மட்டுமே உற்பத்தியை துவங்குவது சிறப்பானதாக கார், பைக் நிறுவனங்கள் கருதுகின்றன.

மாருதி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாகன உற்பத்தியை துவங்குவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டும், அந்த நிறுவனங்கள் உற்பத்தியை துவங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இப்போது உற்பத்தி துவங்கினால், அது சரியானதாக இருக்காது என்றும் கருதுகின்றன.

எனவே, ஜூலை மாதத்திற்கு பின்னரே, நிலைமை சீரடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவும் கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வந்தால் மட்டுமே முழு வீச்சில் வாகன உற்பத்திப் பணிகள் நடக்கும். எனவே, அடுத்த இரு மாதங்களுக்கு வாகன உற்பத்தித் துறைக்கும், இதனை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களுக்கும் கடினமான காலமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








