ராட்சத டயர்களுடன் அசுரனாக மாறிய ஜீப்... இதன் அழகில் மதி மயங்காத கார் பிரியர்களே இருக்க முடியாது!
ஆஃப் ரோடு வாகன பிரியர்களை கவர்கின்ற வகையில் ஜீப் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

வாகனங்களின் மீது பெரியளவில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட சுண்டியிழுக்கும் வகையில் ஜீப் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த ஜீப், மாடிஃபிகேஷன் வாகன உலகத்தையே மெர்சலாக்குகின்ற வகையில் தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, ஜீப்பிற்கு அசுரனை (மான்ஸ்டர்) போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் தனித்துவமான ஸ்டைல் மற்றும் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜீப் பற்றிய முழு வீடியோ கூ வேல் என்ற (Khoo wale) யூட்யூப் சேனல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலமே ஜீப்குறித்த தகவல் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

ஜீப்பின் ஆக்ரோஷமான தோற்றத்திற்காக அதை மாற்றியமைத்த குழு பல்வேறு புதிய அம்சங்களைக் கூடுதலாக சேர்த்திருக்கின்றது. உதாரணமாக ராட்சத டயர், ஹெட்லேம்ப் மற்றும் உடற் கூடுகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருக்கின்றது. இதன் மூலமே மிகவும் முரட்டுத் தனமான அசுரனாக ஜீப் மாறியிருக்கின்றது.

இத்துடன், ஜீப்பிற்கு கவர்ச்சியான தோற்றத்தைச் சேர்க்கின்ற வேலையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்படி, மேற்கூரை நீக்கப்பட்டு கூரையே இல்லாத தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஜீப்பின் உட்பகுதியை வெட்ட வெளிச்சமாக காண்பிக்கும் வகையில் இருக்கின்றது. இருப்பினும், இதுவரை நாம் கண்டிராத புதிய பிம்பத்தை வழங்கும் வகையில் அது அமைந்துள்ளது.

இதற்காக முன் மற்றும் பின் இருக்கைகள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஜீப்பின் முன் பக்க பேனட் மற்றும் கிரில் அமைப்பிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் முகப்பு பகுதியில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றமாக ஹெட்லேம்ப் மாற்றியமைத்தது இருக்கின்றது.

இந்த மின் விளக்கு, மிருகத்தின் கண்களைப் போன்று காட்சியளிக்கின்றது. இதுவே, ஜீப்பின் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்திற்கான முக்கிய காரணியாகும். இத்துடன் ஜீப்பின் நான்கு வீலுக்குமே 17 இன்ச் அகலமுடைய வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிராக்டர்களில் காணப்படுவதைப் போன்றிருக்கின்றது. இந்த டயர்கள் மிகவும் கரடு, முரடான சாலையை அசாதரணமாக கடக்க உதவும்.

இவற்றுடன், ஜீப்பின் நிறமும் மாற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி, மேட் ரகத்திலான லேசான அடர் பச்சை நிறம் பூசப்பட்டுள்ளது. இது ஜீப்பின் தோற்றத்தை மேலும் மெழுகேற்றும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன் பிரீமியம் அம்சமாக, சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் வகையில் ஊஃபர் மற்றும் ஆம்பிளிஃபையர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதில் இசையை ஒலிக்கச் செய்யும்போது விலையுயர்ந்த டிஜே கருவிகளையேத் தோற்கடிக்கின்ற வகையில் இசை ஒலிக்கும். தொடர்ந்து, பவர் ஸ்டியரிங், பவர் பிரேக் மற்றும் பவர் க்ளட்ச் உள்ளிட்டவையும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், எஞ்ஜினிலும் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதற்காக முந்தைய இசுஸு ட்ரூபர் எஞ்ஜின் நீக்கப்பட்டு புதிதாக டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அது பழைய எஞ்ஜினைக் காட்டிலும் அதி-திறனை வெளிப்படுத்தக்கூடியது ஆகும். எனவேதான், பெரும் பொருட் செலவில் மாடிஃபை செய்த இதன் உரிமையாளர் இந்த டீசல் எஞ்ஜினை ஜீப்பில் பயன்படுத்தியிருக்கின்றார்.

இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கு ரூ. 4 லட்சங்கள் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலயே, தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஜீப்புகளிலேயே அதிக அழுகுமிக்க அசுரனாக இந்த ஜீப் உருமாறியிருக்கின்றது. இந்த ஜீப்பின் மேற்கூரை நீக்கப்பட்டதைப் போலவே அதன் கதவுகளும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








