ஜீப் எஸ்யூவி கார்களை டோர் டெலிவிரி பெறும் திட்டம் அறிமுகம்!
ஷோரூமிற்கு செல்லாமல் புதிய ஜீப் எஸ்யூவி கார்களை புக்கிங் செய்து டோர் டெலிவிரி பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார் ஆலைகளும், அதன் டீலர்களும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரலில் விற்பனை பூஜ்யமாகி மிக மோசமான வரலாற்றை பதிவு செய்தது. இந்த நிலையில், ஷோரூம்கள் மூடி இருந்தாலும், கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறையில் தங்களது கார் வாங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பை கார் நிறுவனங்கள் வழங்கத் துவங்கி உள்ளன.

அந்த வகையில், ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜீப் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் முறையில் காரை புக்கிங் செய்து வீட்டிலேயே டெலிவிரி பெறும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக Touch Free என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, தனது Book My Jeep இணையப்பக்கத்தின் வாயிலாக தனது கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே சென்று அனைத்து விதமான சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதாவது, பாதுகாப்பான முறையில் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்வது, டோர் டெலிவிரி பெறுவது உள்ளிட்ட வசதிகளை டீலர் பணியாளர்கள் மூலமாக வழங்க உள்ளது. புக்கிங் செய்தவுடன் டீலர் பணியாளர் வீடியோ கால் அல்லது மொபைல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்.

காரின் அனைத்து சிறப்பம்சங்களையும், ஜீப் இணையதளப் பக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும் என்பதுடன், காரை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதற்கும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை பணியாளர்கள் வீட்டிற்கே சென்று விளக்கிக் கூறுவதுடன், இதர ஆவணை நடைமுறைகளையும் மேற்கொள்வர். இந்த திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே ஜீப் கார்களை வாங்குவதற்கான வாய்ப்பை ஜீப் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

வெறும் மூன்றே நடைமுறையில் ஆன்லைனில் காரை புக்கிங் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அத்துடன், கொரோனா பிரச்னை இருப்பதால், டெஸ்ட் டிரைவ் செய்யும் கார்கள் மற்றும் டோர் டெலிவிரி தரப்படும் புதிய கார்கள் அனைத்தும் உரிய முறையில் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன், டீலர்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தினசரி மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். வாடிக்கையாளர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.


Click it and Unblock the Notifications








