கியா கார்னிவல் காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு
கியா கார்னிவல் காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2020ம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய கார் மாடல்களில் கியா கார்னிவல் முக்கிய இடத்தில் உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு சரியான மாற்று தேர்வாக எதிர்பார்க்கப்படும் இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த நிலையில், கியா கார்னிவல் காருக்கு கடந்த சில நாட்களாக சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்களிலும் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் அடையாளச் சான்றுடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படும்போது இந்த பட்டியலில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெயர் விபரம் பதிவு செய்யப்பட்டு டெலிவிரி கொடுக்கப்படும் என்று சென்னை டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இடவசதி, ஆளுமையான தோற்றம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்த பிம்பத்தை உடைப்பதற்காக, கியா கார்னிவல் எம்பிவி கார் அதிக இடவசதி, ஏராளமான சிறப்பம்சங்கள், அதிக சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வு மற்றும் சரியான விலையில் பிரிமீயம் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கார்னிவல் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும் 441 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு டிவி திரைகள், இரண்டு சன்ரூஃப் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.25 லட்சம் விலையில் புதிய கியா கார்னிவல் கார் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த மாதத்தின் பிற்பாதியில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








