எக்கச்சக்க வசதிகளுடன் கியா கார்னிவல் காரின் புதிய டாப் வேரியண்ட்!
கியா கார்னிவல் காரில் அதிக வசதிகள் நிரம்பிய புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக பிரம்மாண்டமான இந்த எம்பிவி காருக்கு துவக்கத்திலேயே சிறப்பான வரவேற்பை கிடைத்துள்ளது.

கியா கார்னிவல் கார் வசதிகளை பொறுத்து மூன்று விதமான வேரியண்ட்டுகளிலும், இருக்கை அமைப்பை பொறுத்து மூன்று விதமான மாடல்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வேரியண்ட்டுகளை தவிர்த்து, கார்னிவல் காரின் புதிய வேரியண்ட் ஒன்றும் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

தற்போது விற்பனையில் இருக்கும் வேரியண்ட்டுகளைவிட அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கார்னிவல் Hi-Limousine என்ற டாப் வேரியண்ட் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த வேரியண்ட்டும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்போது விற்பனையில் இருக்கும் லிமோசின் என்ற டாப் வேரியண்ட்டை பார்த்தே இந்தியர்கள் வியந்தனர். இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டு இருந்த ஹை-லிமோசின் வேரியண்ட்டில் அதிக ஹெட்ரூம் கிடைக்கும் வகையில் மேற்கூரையில் பெட்டி போன்ற உயர்த்தப்பட்ட கூரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

அத்துடன், இதன்மூலமாக, பின் வரிசை இருக்கைகளில் அமர்பவர்களுக்கு அதிக ஹெட்ரூம் இடவசதி கிடைக்க வழி வகுக்கிறது. விசாலமான உணர்வையும் இந்த கூரை அமைப்பு வழங்குகிறது.

காருக்குள் பின்னால் அமர்ந்து இருக்கும் எல்லோரும் பார்ப்பதற்கு ஏதுவாக பெரிய டிவி திரையும் அந்த உயர்த்தப்பட்ட கூரை அமைப்பில் பொருத்தப்பட்டு இருந்தது. அதாவது, சுற்றுலா வேன் போன்ற அமைப்பை அனைவருக்கும் இது வழங்கும்.

உட்புறத்தில் உயர்த்தப்பட்ட கூரை அமைப்பில் நீளமான விளக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கன்ட்ரோல் பட்டன்கள் இரண்டாவது வரிசையில் உள்ள இடதுபுற இருக்கையின் ஆர்ம் ரெஸ்ட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, எளிதாக கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். ஓட்டுனர் அல்லது முன் இருக்கை பயணித்தை தொந்தரவு செய்யும் அவசியமில்லை.

இப்போது விற்பனையில் இருக்கும் லிமோசின் வேரியண்ட்டில் இருப்பது போன்று இந்த வேரியண்ட்டிலும் 7 சீட்டர் மாடலாக இருக்கிறது. இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டு விஐபி இருக்கைகளில் ஆர்ம்ரெஸ்ட், லெக் ரெஸ்ட் மற்றும் சாய்மான வசதியுடன் இருக்கிறது. மூன்றாவது வரிசையில் மூன்று பேர் செல்வதற்கான பெஞ்ச் இருக்கை அமைப்பு உள்ளது.

கப் ஹோல்டர்கள், மொபைல் சார்ஜர்கள், தஸ்தாவேஜுகளை வைப்பதற்கான சிறிய டிராயர் அமைப்பு, லேப்டாப் சார்ஜர், ஜன்னல்களுக்கு திரை சீலைகள், அதிக பொருட்களை வைப்பதற்கான பூட்ரூம் இடவசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த மாடலிலும் 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 201 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கியா கார்னிவல் கார் ரூ.24.95 லட்சம் முதல் ரூ.33.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், புதிய ஹை லிமோசின் வேரியண்ட் ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்போது லிமோசின் வேரியண்ட்டிற்கு அதிக டிமான்ட் இருப்பதால், இந்த ஹை லிமோசின் வேரியண்ட்டையும் இந்தியாவில் மிக விரைவில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








