மாருதி எர்டிகா காரின் மார்க்கெட்டை கபளீகரம் செய்ய வரும் கியா எம்பிவி கார்!
மாருதி எர்டிகா மார்க்கெட்டை குறிவைத்து புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை களமிறக்க கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

பெரும் வரவேற்பு
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார் இந்திய மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற கார் பிராண்டாக மாறி இருக்கிறது. கியா மோட்டார் நிறுவனம் களமிறக்கி வரும் புதிய கார் மாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அடுத்த மாடல்
செல்டோஸ், கார்னிவல், சொனெட் ஆகிய மூன்று மாடல்களும் தம் தமது ரக கார் மாடல்களில் முன்னணி வகிக்கின்றன. இந்த நிலையில், அடுத்து ஒரு அசத்தலான மாடலை களமிறக்க கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

புதிய எம்பிவி ரக கார்
அதாவது, மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு இடையிலான ரகத்தில் புதிய மிட்சைஸ் எம்பிவி கார் மாடலை கியா மோட்டார் களமிறக்க உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

அறிமுகம் எப்போது?
அதாவது, இந்த இரு மாடல்களுக்கும் இடைப்பட்ட ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு இணையான பரிமாணங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கும். வரும் 2022ம் ஆண்டு இந்த புதிய கார் மாடலை இந்தியா கொண்டு வர கியா மோடடார் திட்டமிட்டுள்ளது.

டிசைன்
செல்டோஸ், சொனெட் கார்களின் முகப்பு டிசைன் அம்சங்கள் இந்த காரிலும் கையாளப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், எம்பிவி காருக்கு சில குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்
எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், ரியர் வியூ கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவையும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின் தேர்வு
புதிய கியா மிட்சைஸ் எம்பிவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

எதிர்பார்க்கும் விலை
புதிய கியா எம்பிவி கார் மாடலானது ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் நிலைநிறுத்தப்படும். இந்த ரகத்தில் மாடல்கள் குறைவாக இருப்பதால், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








