ஐரோப்பாவில் புதுமையான காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தும் கியா... இந்தியாவிலும் எதிர்பார்ப்பு!
ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான காப்பீட்டு திட்டத்தை கியா மோட்டார் அறிவித்துள்ளது. இந்த காப்பீட்டு திட்டம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் கியா மோட்டார் நிறுவனம் மிக குறைவான காலத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பமான கார் பிராண்டாக மாறி இருக்கிறது. செல்டோஸ் எஸ்யூவியும், கார்னிவல் எம்பிவி காரும் கியா நிறுவனத்தின் அந்தஸ்தையும், வர்த்தகத்தையும் தூக்கி நிறுத்தி உள்ளன.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, கார் விற்பனையில் பெரும் தொய்வும் முடக்க நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த சூழலில், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் கடந்த வாரம் முதல் கார் ஷோரூம்கள் திறப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், வாடிக்கையாளர்களின் வரவும், விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை.

இதனை மனதில் வைத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுமையான காப்பீட்டு திட்டத்தை கியா மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, பலரும் வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் கார் வாங்கும் முடிவை தள்ளிப்போட்டுள்ளனர்.

அவர்களை கவரும் விதமாக, புதிய இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கியா வழங்க உள்ளது. இந்த காப்பீட்டுக்கு மாதத்திற்கு 15 முதல் 20 யூரோ பிரிமீயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் வேலை இழக்கும்பட்சத்தில், அவர்கள் புதிய வேலை கிடைக்கும் வரையில் மாதத் தவணையை கட்டாமல் தாமதமாக செலுத்துவதற்கான வாய்ப்பை இந்த காப்பீட்டு திட்டம் வழங்கும்.

எனினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக கியா மோட்டார் ஐரோப்பியப் பிரிவு தலைவர் எமிலியோ ஹரீரா தெரிவித்துள்ளார். மேலும், கியா மோட்டார் நிறுவனத்திற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காப்பீட்டு திட்டத்தை அளித்து வரும் சாட்டென்டர் கன்ஸ்யூமர் பைனான்ஸ் நிறுவனம் மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த கியா திட்டமிட்டுள்ளது.

இந்த புதுமையான காப்பீடு திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் வரவு அதிகரிக்கும் என்று கியா மோட்டார் நம்புகிறது. மேலும், வாகனத் துறை மீண்டு வருவதற்கு 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது போன்று, பழைய கார் அழிப்பு மற்றும் இதர ஊக்குவிப்புத் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா பிரச்னை காரணமாக, வேலை இழப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற காப்பீட்டு திட்டங்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கினால் பலன் அளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








